Published : 10 Sep 2020 08:36 AM
Last Updated : 10 Sep 2020 08:36 AM

ஜிஎஸ்டி அலுவலகத்தில் இந்தி திணிப்புக்கு எதிரான புகார்: ஆணையருக்கு உதவி ஆணையர் கண்டனம்

இந்தி மொழி தெரியாத தனக்கு இந்திப் பிரிவில் பணி ஒதுக்கியதன் மூலம், தன் மீது இந்தி திணிப்பு செய்யப்பட்டு உள்ளதாக சரக்கு மற்றும் சேவை வரி உதவி ஆணையர் பா.பாலமுருகன் 2 நாட்களுக்கு முன்பு புகார் தெரிவித்திருந்தார்.

இப்புகாரை மறுத்து, சென்னை புறநகர் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆணையர் நேற்று முன்தினம் விளக்கம் அளித்து இருந்தார். அதில், "இந்தியை திணிப்பதாகக் கூறும் அதிகாரி, மும்பையில் 8 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். இந்த அலுவலகத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில், அவர் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்" எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு உதவி ஆணையர்பாலமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் நேற்று கூறியதாவது:

சமீபத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக நான் குரல் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்குவிளக்கம் அளிக்கும் வகையில்,எனது ஆணையர் பத்திரிகைகளுக்கு ஒரு செய்திக்குறிப்பை அளித்திருந்தார். அதில், நான் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 8 ஆண்டுகள் பணிபுரிந்து உள்ளதாகவும் எனவே, அங்கு அடிப்படை இந்தி அறிவை வளர்த்துக் கொண்டிருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்து உள்ளார். இதைக் கூற அவருக்கு எவ்வித அடிப்படை உரிமையும் கிடையாது.

நீங்கள் அங்கு பணியாற்றிய போது இந்தி மொழியைக் கற்றுக் கொண்டிருக்க வேண்டும் என கூறாமல் கூறியுள்ளார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மேலும், ஆணையர் இந்த அலுவலகத்தில் வடமாநில அதிகாரி ஒருவர் 30 ஆண்டுகள் பணியாற்றி விட்டு இந்த மாதம் ஓய்வு பெற உள்ளதாகக் கூறி உள்ளார். அந்த அதிகாரியிடம் அவருக்கு தமிழ் தெரியுமா என ஆணையர் கேட்பாரா?

வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் 30 ஆண்டுகள் தமிழகத்தில் பணியாற்றினாலும் அவருக்குதமிழ் தெரியாது. அவரிடம் கேட்க முடியாது. அதேநேரம், ஏன் இந்தி கற்கவில்லை என என்னிடம் கேட்பது கண்டனத்துக்கு உரியது.இவ்வாறு பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x