

தமிழகத்தில் பூங்காக்கள், விளையாட்டு மைதானங்களில் உடற்பயிற்சி, விளையாட்டு பயிற்சி அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன
தமிழகத்தில் செப்.1-ம் தேதி முதல் 8-வது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பின்போது உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சிக்காக பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் திறக்க அனுமதியளிக்கப்பட்டது. இந்நிலையில், பூங்காக்களில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தலைமைச் செயலர் கே.சண்முகம் வெளியிட்டஅரசாணையில் கூறியிருப்பதாவது: விளையாட்டு மைதானங்களின் வாயில்களில் சோப்பு திரவம், கைகழுவும் திரவம் ஆகியவை வழங்கப்பட வேண்டும். உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பிறகே மைதானத்துக்குள் யாரையும் அனுமதிக்க வேண்டும். முகக் கவசம்அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். மைதானத்தின் உள்ளேயும், வெளியேயும் எச்சில் துப்புதல் தடை செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக 100 பேர்
மைதான பொறுப்பு அதிகாரிகள், விளையாட்டு பயிற்சியாளர்கள் மைதானத்தின் கொள்ளளவை கணக்கிட்டு, அதிகபட்சமாக 100 பேரை மட்டுமே அனுமதிப்பதுடன், சமூக இடைவெளி பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். நோய் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வருவோரை அனுமதிக்கக் கூடாது.
பொதுமக்கள் தங்களுக்கான குடிநீரை தாங்களே பாட்டில்களில் கொண்டுவர வேண்டும். பூங்காக்களில் பொதுமக்களை பகுதி பகுதியாக அனுமதிக்கலாம். விளையாட்டு மைதானங்களில், தேவைப்படும் பட்சத்தில் டோக்கன்கள் வழங்கலாம். பொதுமக்கள் பூங்காக்களில் போட்டுச் செல்லும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும். மைதானத்துக்குள் தின்பண்டங்கள், துரித உணவு விற்பனை தடை செய்யப்படுகிறது.
பூங்கா, விளையாட்டு மைதானத்தில் பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோய்கள் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு அனுமதியில்லை.
இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
புதிய தளர்வுகள்
இதற்கிடையே, தொழிற்சாலைகள், கடைகள், நிறுவனங்களுக்கு புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலர் கே.சண்முகம் நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:
கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் வகையில் பொது ஊரடங்கு செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளும், தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட வழிகாட்டு முறைகளில் தற்போது ஒருசில திருத்தம் செய்யப்பட்டு புதிய தளர்வுகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
அதன்படி, அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கும் வகையில் ஊழியர்களை அழைத்து வரும் வாகனங்களில் மொத்த இருக்கைகளில் 60 சதவீதத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பணிபுரியும் இடங்களில் 2 ஷிப்ட்களுக்கு இடையே போதிய நேர இடைவெளி இருக்க வேண்டும்.நிறுவனங்களில் ஒரு நாளைக்கு எத்தனை பார்வையாளர்களை அனுமதிப்பது என்பதை நிறுவனங்கள் நிர்ணயித்துக் கொள்ளலாம். வெளியிடங்களில் இருந்து நிறுவனங்களுக்கு பணிபுரிய வரும் ஊழியர்களுக்கு சிறப்பு போக்குவரத்து வசதி செய்யப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடு நீக்கப்படுகிறது. கார்கள், ஜீப்களில் ஓட்டுநர் நீங்கலாக 3 பேர் பயணம் செய்யலாம்.
ஏசி பயன்படுத்தலாம்
ரெஸ்டாரண்ட்கள் (ஹோட்டல்கள்) கடைகள் உள்ளிட்ட இதர நிறுவனங்களில் பொதுப்பணித் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு விசாலமான காற்றோட்ட வசதி மற்றும் ஏசி வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். ஏசி சாதனத்தில் வெப்பநிலை 24 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.