

மூன்று ஆண்டுகளில் பிஎச்.டி ஆராய்ச்சி மேற்கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் 339 இடங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) அனுமதிவழங்கியுள்ளது.
தொழில்நுட்பத் துறையில் அதிநவீன முறையில் ஆராய்ச்சி மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு 3 ஆண்டுகளில் பிஎச்.டிமுடிக்கும் வகையில் ஏஐசிடிஇ முனைவர் திட்டம் (ஏடிஎப்) என்ற புதிய திட்டத்தை ஏஐசிடிஇ அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி, பசுமை தொழில்நுட்பம், 3டி பிரிண்டிங், அணு பொறியியல், செயற்கை நுண்ணறிவு, நகர வடிவமைப்பு உள்ளிட்ட 20 துறைகளில் பிஎச்.டி ஆராய்ச்சி மேற்கொள்ள ஏஐசிடிஇ ஊக்குவித்து வருகிறது. இந்நிலையில், ஏடிஎப் திட்டத்தின் கீழ் ஆராய்ச்சி மேற்கொள்ள தகுதி வாய்ந்த கல்வி நிறுவனங்களை ஏஐசிடிஇ தேர்வு செய்துள்ளது.
நுழைவுத்தேர்வு தேர்ச்சி அவசியம்
அதன்படி, நாடு முழுவதும் உள்ள 39 கல்வி நிறுவனங்களில் 339 இடங்களுக்கு ஏஐசிடிஇ அனுமதி அளித்துள்ளது. இதில்,தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மட்டும் 15 இடங்கள்கிடைத்துள்ளன. இந்த திட்டத்தின்கீழ் பிஎச்.டி ஆராய்ச்சி மேற்கொள்ள ‘கேட்’ அல்லது ‘நெட்’நுழைவுத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். அதேபோல், 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஆராய்ச்சி மேற்கொள்ள தேர்வாகும் மாணவர்களுக்கு, முதல் 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.31 ஆயிரமும், 3-ம் ஆண்டில் மாதம் ரூ.35 ஆயிரமும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
தமிழகத்தில் ஏடிஎப் திட்டத்தின் கீழ் ஆராய்ச்சி மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.