

விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தில் முறைகேடு நடந்ததற்கு மத்திய அரசின் திடீர் அறிவிப்புதான் காரணம் என்று முதல்வர் பழனிசாமி குற்றம் சாட்டினார்.
திருவண்ணாமலையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறை கள் சார்பில் ரூ.52.59 கோடியில் 31 முடி வுற்ற திட்டப் பணிகளை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். ரூ.19.20 கோடியில் 11 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 18,279 பேருக்கு ரூ.134 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் வழங் கினார்.
அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் கூறியதாவது:
திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை குறைக்க முடியாது. குறைப்பதற்கு வாய்ப்பு இல்லை. அதிகப்படுத்தவே வாய்ப்பு உள்ளது. பொறியியல் மாணவர்களின் அரியர்ஸ் தேர்வு தேர்ச்சி அறிவிப்பு குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் தெளி வாக தெரிவித்துள்ளார்.
சிபிசிஐடி விசாரணை
விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தில் 13 மாவட்டங்களில் முறை கேடு நடந்துள்ளதை கண்டறிந்து, சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 4 மாதங்களில் மட்டும் பயனாளி களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. குறுகிய காலத்தில் 5 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்ததால் சந் தேகம் ஏற்பட்டு, உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். முறை கேடாக பெயர் சேர்க்கப்பட்டவர்களிடம் இருந்து பணம் திரும்ப பெறப்பட்டு வருகிறது.
இந்த முறைகேட்டுக்கு காரணமே, கடந்த ஆண்டு இறுதியில் விவசாயிகள் தானாக பதிவு செய்யும் முறையை மத்திய அரசு அறிவித்ததுதான். ஆதார் மற்றும் குடும்ப அட்டையை அடிப்படையாக கொண்டு பதிவு செய்யலாம் என அறிவிப்பு கொடுத்த தால் பிரச்சினை ஏற்பட்டது. முறை கேடு நடந்த இடங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, இதில் தொடர் புடையவர்கள் மீது வழக்கு தொட ரப்பட்டுள்ளது.
18 பேர் கைது
தகுதியற்ற பயனாளிகள் 5 லட் சம் பேர் இருக்கலாம் என கணக் கிடப்பட்டுள்ளது. முறைகேட்டில் ஈடு பட்டதாக 18 பேர் கைது செய்யப்பட் டுள்ளனர். 81 ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 34 அலுவலர்கள் மீது துறை ரீதியில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முறைகேட்டில் ஈடுபட்டவர் கள் மீது சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பசுமை வழிச் சாலை
சென்னை – சேலம் இடையே 8 வழிச் சாலை அமைக்கும் திட்டம் என்பது மத்திய அரசின் திட்டமாகும். இது மாநில அரசின் திட்டம் இல்லை. நாடு வளர்ச்சி அடைகிறது. நாளுக்கு நாள் வாகன எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சாலைகளை விரிவுபடுத்த வேண்டிய நிலை உள்ளது. அதன் அடிப்படையில்தான் பசுமை வழிச் சாலையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. நிலத்தை கையகப்படுத்தி கொடுப்பதுதான் தமிழக அரசின் பணி. இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.
மாநிலத்தின் பொருளாதாரம் மேம்பாடு அடைய தொழிற்சாலைகள் அதிகம் இருக்க வேண்டும். அதற்கு உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க வேண்டும். உள்கட்டமைப்பு சரியாக இருக்கும் மாநிலம்தான், தொழில் துறை யில் வளர்ச்சி அடையும். திமுக ஆட்சியிலும் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டது. சுங்கச்சாவடி அமைத்து 794 கி.மீ. நீளமுள்ள சாலையை அமைத்தார்கள். அப் போது விவசாயிகள் பாதிக்கப் படவில்லையா, இப்போது மட்டும் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். விபத்து இல்லாத, குறைந்த நேர பயணம் என்பதுடன், தொழிற்சாலை கள் நிறைந்த பகுதிக்கு கனரக வாகனங்கள் தடை இல்லாமல் செல்ல வேண்டும் என்பதற்காகதான் இந்த திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இது மிகப்பெரிய திட்டம். இதற்கு, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு கொடுக்கிறதோ அதை மத்திய அரசு செயல்படுத்தும்.
கரோனா வைரஸ் தொற்று என் பது உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சினை. ஒவ்வொரு குடும்பத்தைச் சேர்ந்தவர் களும், தங்களது குழந்தைகள் பத்திர மாக இருக்க வேண்டும் என விரும்பு வார்கள். அவர்களது எண்ணங்களின் படியே அரசு செயல்படும். இவ்வாறு முதல்வர் கூறினார்.
பள்ளிகள் திறப்பு எப்போது?
திருவண்ணாமலையைத் தொடர்ந்து விழுப்புரத்தில் நேற்று மாலை கரோனா தடுப்புப் பணிகள் குறித்து முதல்வர் ஆய்வு மேற் கொண்டார். பின்னர் செய்தியாளர் களிடம் அவர் கூறும்போது, ‘‘செப்.21 முதல் பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் கரோனா தொற்று கட்டுக்குள் வந்த பிறகு, பெற்றோரின் மனநிலை அறிந்து அதன்பிறகு பள்ளிகள் திறப்பது பற்றி முடிவெடுக்கப்படும்’’ என்றார்.