

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு சமூக ஆர்வலர்களால் தூர்வாரப்பட்ட தேவூரணியில் மீண்டும் பொதுமக்கள் குப்பையைக் கொட்டி வருகின்றனர்.
இளையான்குடி பஸ்நிலையம் அருகே புஷ்பகர ஊருணி (எ) தேவூரணி உள்ளது. பேரூராட்சிக்கு சொந்தமான இந்த ஊருணிக்கு காலப்போக்கில் வரத்துக்கால்வாய் தூர்ந்து போனதாலும், ஆக்கிரமிப்பாலும் நீர் வரத்து தடைப்பட்டது.
மேலும் பொதுமக்கள் குப்பை கொட்டியும், கழிவுநீரை ஊருணிக்குள் விட்டும் வந்தனர். ஊருணி முழுவதும் செடிகளும், புதர்களும் வளர்ந்து பயன்படுத்த முடியாதநிலையில் இருந்தது.
நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு, 2 ஆண்டுகளுக்கு முன்பு, சமூக ஆர்வலர் சாகுல்அமீது, தனது நண்பர்களுடன் இணைந்து சொந்த பணத்தை செலவு செய்து ஊருணியை தூர்வாரினார். மேலும் வரத்துக்கால்வாயையும் சீர்ப்படுத்தினார்.
கடந்த ஆண்டு பெய்த மழையில் ஊருணி நிரம்பியது. இதனால் நிலத்தடிநீர் மட்டமும் உயர்ந்து, நகரில் உள்ள வீட்டு திறந்தவெளி கிணறுகள், ஆழ்த்துளை கிணறுகளில் தண்ணீர் மட்டமும் உயர்ந்தது.
இந்நிலையில் மீண்டும் இந்த ஊருணியில் குப்பை கொட்டியும், கழிவுநீரை விட்டும் வருகின்றனர். இதனால் தேவூரணி பாழாகி வருகிறது. இதை தடுக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து சமூகஆர்வலர் அம்பலம் ராவுத்தர் நெயினார் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டு தேவூரணி நிரம்பியதால் நகரில் ஓரளவு தண்ணீர் தட்டுப்பாடு குறைந்தது. சமூகஆர்வலர்கள் தூார்வாரியும் கூட பேரூராட்சி நிர்வாகம் ஊருணியை பராமரிக்கவில்லை. இதனால் மீண்டும் ஊருணி பாழாகி வருகிறது,’’ என்று கூறினார்.