கொடைக்கானலில் குவியும் சுற்றுலாப் பயணிகள்: இ-பாஸ் இல்லாமல் பேருந்தில் வந்தவர்கள் இறக்கிவிடப்பட்டனர்  

கொடைக்கானலில் குவியும் சுற்றுலாப் பயணிகள்: இ-பாஸ் இல்லாமல் பேருந்தில் வந்தவர்கள் இறக்கிவிடப்பட்டனர்  
Updated on
1 min read

ஐந்து மாதங்களுக்குப் பிறகு கொடைக்கானல் செல்ல சுற்றுலாபயணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்ட நிலையில் பலரும் ஆர்வமுடன் கார், இருச்சக்கர வாகனங்களில் வந்து கொடைக்கானலில் குவிந்து ரம்மியான இயற்கைச் சூழலை ரசித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கரோனா ஊரடங்கு தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்னதாகவே சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன. கடந்த ஐந்து மாதங்களாக ஊரடங்கால் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியில்லாத நிலை இருந்தது.

ஊரடங்கில் பல தளர்வுகள் செய்து அறிவிப்பு வெளியிட்டபோதும் சுற்றுலாத் தலங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் கருதி இன்று முதல் கொடைக்கானல் சுற்றுலாத்தலத்திற்கு செல்ல அனுமதிப்பட்டது.

ஆனால், வெளிமாவட்டத்தினர் இ-பாஸ் கட்டாயம் பெறவேண்டும் என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை முதலே இளைஞர்கள் பலர் இருசக்கரவாகனங்களில் கொடைக்கானல் நோக்கிச் சென்றனர். கார்களில் பலர் குடும்பத்துடன் சென்றனர்.

வெள்ளி நீர்வீழ்ச்சி அருகேயுள்ள டோல்கேட்டில் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டு வெளிமாவட்டத்தினரிடம் இ-பாஸ் கேட்கப்பட்டது. இருசக்கரவாகனத்தில் வந்த இளைஞர்கள் பலரும் இ-பாஸ் இல்லாமல் வந்திருந்தனர். அவர்கள் கொடைக்கானலுக்குள் செல்ல அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர்.

பேருந்துகளில் சோதனை நடத்தப்பட்டதில் இ-பாஸ் இன்றி பயணித்த வெளிமாவட்டப் பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பயணிகளுக்கு ஆதார் உள்ளிட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையைக் காண்பித்து சென்றனர்.

தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான பிரையண்ட் பூங்கா, ரோஜாத் தோட்டம், செட்டியார் பூங்கா உள்ளிட்டவை திறக்கப்பட்டு ஒரு மணிநேரத்திற்கு 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

ஐந்து மாதங்களுக்குப் பிறகு முதன்முதலில் பிரையண்ட் பூங்காவிற்கு நுழைந்த முதல் சுற்றுலா பயணிக்கு தோட்டக்கலைத்துறையினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

கொடைக்கானல் செல்ல தினமும் ஆயிரம் பேருக்கு மட்டுமே இ-பாஸ் அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகம் முடிவ செய்துள்ளது. இதன் மூலம் கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களில் அதிகக்கூட்டம் சேர்வது தவிர்க்கப்படவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in