Published : 09 Sep 2020 08:01 PM
Last Updated : 09 Sep 2020 08:01 PM

சம்ஸ்கிருதம் படிக்க ஊக்கத்தொகை அறிவிப்பதா?- மத்திய அரசுக்கு பெ.மணியரசன் கண்டனம்

தமிழ்நாட்டில் சம்ஸ்கிருதம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளதாகப் பள்ளிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"அரசுப் பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகத்திலிருந்து தமிழ்நாடு அரசுப் பள்ளிகளுக்கு அண்மையில் ஒரு சுற்றறிக்கை வந்துள்ளது. அதில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், சம்ஸ்கிருதம் படிக்க இந்திய அரசு உதவித்தொகை தருவதாகவும், அவ்வாறு விரும்பும், தகுதியுள்ள மாணவர்களின் பட்டியலை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டும் நெறிமுறைகளைப் பின்பற்றி, உரிய படிவத்தில் நிரப்பி 10.09.2020 மாலை 5 மணிக்குள் கையொப்பமிட்ட நகலினை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு இந்தியை மட்டுமின்றி சம்ஸ்கிருதத்தையும் சேர்த்தே தமிழ்நாட்டில் திணிக்கிறது என்பதற்கு மேற்கண்ட கடிதம் மற்றுமொரு சான்று. இந்தி மற்றும் சம்ஸ்கிருத மொழிகளை விரும்பினால் படிக்கலாம் என்று போலியாகச் சொல்லிக்கொண்டு, இந்தியைக் கட்டாயமாகவும், சம்ஸ்கிருதத்தைப் பணத்தாசை காட்டியும் திணிக்கிறது மத்திய அரசு.

இச்செயல் தமிழை, தமிழ்நாட்டின் கல்வியில் இருந்து முற்றிலுமாக நீக்கிவிடும் தொலைநோக்குத் திட்டம் கொண்டது. மேலும், தமிழ்நாட்டு அரசின் இருமொழிக் கொள்கைக்கு எதிரான செயல்பாடாகும். அத்துடன் இந்தி, சம்ஸ்கிருதம் இரண்டையும் திணிப்பதன் மூலம் தமிழ்நாட்டுக் கல்வியை ஆரிய மயப்படுத்தும் உள்நோக்கமும் இதில் அடங்கியுள்ளது.

தனது அரசின் இருமொழித் திட்டத்திற்குக் குழி தோண்டும் சம்ஸ்கிருதத் திணிப்பை ஆதரித்து, தமிழக அரசு தனது அதிகாரத்தில் உள்ள பள்ளிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்புவது தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் செயலாகும். தமிழக அரசு இருமொழிக் கொள்கையை உண்மையாகவும் உறுதியாகவும் பின்பற்றுகிறது என்றால் உடனடியாக சம்ஸ்கிருதத் திணிப்புச் சுற்றறிக்கையை ரத்துசெய்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்".

இவ்வாறு மணியரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x