வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி, வெப்பச் சலனம்; 8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி, வெப்பச் சலனம்; 8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
Updated on
2 min read

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக சேலம், நாமக்கல், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பு:

“தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைபெய்யும். கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யும்.

சேலம், நாமக்கல், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

அடுத்த 48 (10.09.2020) மணி நேரத்திற்கு வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்:

வத்தலை அணை (திருச்சி) 14 செ.மீ., தேவலா (நீலகிரி), செய்யாறு (திருவண்ணாமலை), சமயபுரம் (திருச்சி), கலவை (ராணிப்பேட்டை) தலா 8 செ.மீ., முசிறி (திருச்சி), திருமங்கலம் (மதுரை ) தலா 6 செ.மீ., வேப்பந்தட்டை (பெரம்பலூர்), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), மணல்மேடு (நாகப்பட்டினம்), பரமத்தி வேலூர் (நாமக்கல்) தலா 5 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

செப்டம்பர் 12,13 ஆகிய தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய ஆந்திர கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் செப்டம்பர் 13 ஆம் தேதி வரை தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடல் உயர் அலை முன்னறிவிப்பு:

தென் தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை செப்.9 ஆம் தேதி இரவு 11.30 மணி வரை கடல் உயர் அலை 3.5 முதல் 4.0 மீட்டர் வரை எழும்பக்கூடும்”.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in