Published : 09 Sep 2020 04:57 PM
Last Updated : 09 Sep 2020 04:57 PM

நீலகிரியில் பூங்காக்கள் திறப்பு: குறைந்த அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை

உதகை தாவரவியல் பூங்காவுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளுக்குப் பூக்களைக் கொடுத்து பூங்கா ஊழியர்கள் வரவேற்றனர்.

உதகை

நீலகிரி மாவட்டத்தில் 172 நாட்களுக்குப் பிறகு தோட்டக்கலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 7 பூங்காக்கள் சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறக்கப்பட்டன. குறைவான சுற்றுலாப் பயணிகளே வந்திருந்தனர்.

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் மார்ச் மாதம் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டன. இதன் காரணமாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாத் தொழிலாளர்கள் வாழ்வாதாரமின்றித் தவித்து வருகின்றனர். ஊரடங்கால் மே மாதத்தில் நடைபெற இருந்த மலர்க் கண்காட்சியும் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், கரோனா ஊரடங்கில் படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. சுற்றுலாவை நம்பியுள்ள மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, தோட்டக்கலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள் இன்று (செப். 9) முதல் திறக்கப்பட்டன.

உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, கட்டேரி பூங்கா, மரவியல் பூங்கா, தேயிலை பூங்கா, கோத்தகிரி நேரு பூங்காக்கள் திறக்கப்பட்டன.

உதகை தாவரவியல் பூங்காவில் பெரியவர்களுக்கு ரூ.40, சிறியவர்களுக்கு ரூ.20 என நுழைவுக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கவும், கிருமிநாசினி கொண்டு கைகளைச் சுத்தப்படுத்தியும், தெர்மல் ஸ்கேனர் கொண்டு வெப்பநிலை சரிபார்க்கப்பட்டும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

முதல் நாளான இன்று குறைந்த அளவிலேயே சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்.

தனிமனித இடைவெளியுடன் பூங்காவைக் கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்.

உதகை தாவரவியல் பூங்காவுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளைத் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன் பூக்களைக் கொடுத்து வரவேற்றார்.

அவர் கூறும் போது, "பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவிப்புப் பலகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. மேலும், கூட்டம் அதிகரிக்காத வண்ணம் பூங்காவுக்குள் நுழையும் சுற்றுலாப் பயணிகள் பூங்காவைக் கண்டு ரசிக்க ஒருவழிப்பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதே பாதையில் எதிர் எதிரே யாரும் வர முடியாது" என்றார்.

காலை முதல் மழை பெய்து கொண்டிருந்ததால் உதகையில் ரம்மியமான காலநிலை நிலவியது.

சுற்றுலாப் பயணிகள் கூறும் போது, "உதகையில் காலநிலை ரம்மியமாக இருந்தது. அதை வெகுவாக அனுபவித்தோம். 6 மாதம் ஊரடங்கால் வீட்டில் முடங்கியிருந்த நிலையில், தற்போது சுதந்திரமாகவும், மன அழுத்தத்திலிருந்து விடுபட்டதாகவும் உணர்கிறோம்" என்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தொட்டபெட்டா மலை சிகரம், படகு இல்லம், பைக்காரா படகு இல்லம், நீர்வீழ்ச்சி மற்றும் முதுமலை புலிகள் காப்பகம் போன்றவை மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x