

‘பேசாலை’ – இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் உள்ள ஒரு மீனவக் கிராமம். ஒரு காலத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னிப் பகுதிக்கு மண்ணெண்ணெய், பெட்ரோல் கடத்தப்படுவதற்கான முக்கியத் தலமாக இக்கிராமம் விளங்கியது. இங்குள்ள மீனவர்களுக்கும் இந்திய மீனவர்களுக்கும் இடையில் அவ்வப்போது பிரச்சினைகள் ஏற்படுவது உண்டு.
இந்நிலையில், இந்தியப் படகுகள் எல்லை தாண்டி அத்துமீறலில் ஈடுபடுவதாக இந்தக் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று நடத்தியிருக்கும் போராட்டம், தமிழக மீனவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து பேசாலை இழுவைப் படகு உரிமையாளர்கள் சங்கத்தினருக்குத் தமிழகத்தைச் சேர்ந்த நில உரிமைக் கூட்டமைப்பு ஒரு கடிதம் எழுதியுள்ளது.
‘இந்தப் போராட்டம் தமிழர்களைப் பிரித்தாளும் சூழ்ச்சிக்குத்தான் துணைபுரியும். நமக்குள் இருக்கும் பிரச்சினையை நாமே பேசித் தீர்த்துக்கொள்வதுதான் நல்லது’ என அதில் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பேசாலை புனித வெற்றிநாயகி இழுவைப் படகு உரிமையாளர்கள் சங்கம் இன்று காலை நடத்திய கவன ஈர்ப்புக் கண்டன நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள், தமிழக மீனவர்கள் குறித்துத் தங்கள் மனக்குறையைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
“கடல்வாழ் உயிரினங்களின் உற்பத்திக் கருவூலமாகத் திகழ்கின்ற மன்னார் கண்டமேடையினைக் குறிவைத்து இந்திய இழுவைப் படகுகள் படையெடுத்து வருகின்றன. இந்த அத்துமீறலினால் நீண்டகாலமாக இலங்கையின் வடக்கு, மேற்குக் கரையோர மக்களின் வாழ்வதாரம் பெருமளவு பாதிக்கப்படுகிறது. எமது கடல்வளம் தொடர்ந்து சுரண்டப்பட்டு அழிக்கப்படுகிறது. எமது தொழிலாளர்கள் நிறைய உயிராபத்துகளைச் சந்தித்து வருகின்றனர். எமது மீன்பிடி வள்ளங்கள், வலைகள், உபகரணங்களுக்கு நிறையச் சேதங்கள் ஏற்படுகின்றன. போதைப் பொருட்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை எங்கள் நாட்டிற்குள் கொண்டுவருதல், ஆட்கடத்தல் போன்றவையும் நடக்கின்றன. கரோனா தொற்று அபாயமும் ஏற்படுகிறது” என்றெல்லாம் அவர்கள் குற்றம் சாட்டியிருக்கின்றனர்.
இதையடுத்து, பேசாலை இழுவைப் படகு உரிமையாளர்கள் சங்கத்தினருக்கு, தமிழக நில உரிமைக் கூட்டமைப்பு ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறது. இது குறித்து இந்தக் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணப்பாளர் எம்.எஸ்.செல்வராஜ் கூறியதாவது:
“பேசாலையில் வசிக்கும் மீனவர்களின் கடல்சார்ந்த வாழ்வாதாரம் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. அதேசமயம், தமிழக மீனவர்களின் நிலை பரிதாபமான சூழலுக்குத் தள்ளப்பட்டு வருகிறது. பாரம்பரியமாகக் கடலையும் கடல் வளத்தையும் நம்பி வாழும் உண்மையான மீனவர்கள், உள்நாட்டுப் பன்னாட்டுக் கொள்கைகளால் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். மீனவர் சமுதாயத்துக்குத் தொடர்பே இல்லாத சில முதலாளிகள், மீனவர் எனும் போர்வையில் அத்துமீறலில் ஈடுபடுகின்றனர். பேசாலை மீனவர்கள் குறிப்பிடும் செயல்களில் ஈடுபடுவது இவர்கள்தான்.
இதற்கு எதிராகத் தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய உண்மையான மீனவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதைப் பேசாலையில் போராட்டங்கள் நடத்தும் மீனவர்கள் சங்கத்திற்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். பேசாலை மீனவர் போராட்டம் முழுக்க முழுக்க நியாயமானது என்பதைப் புரிந்துகொள்கிறோம்.
ஆனால், இலங்கை அரசு இதைப் பயன்படுத்தி ஈழத் தமிழர்களுக்கும் (இலங்கைவாழ் அனைத்துத் தமிழர்களுக்கும்) தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் இருக்கும் தொப்புள்கொடி உறவைச் சிதைக்க முற்படலாம். இது எதிர்காலத்தில் மேலும் பெரும் சிக்கலை ஏற்படுத்தும்.
ஆகவே, இதைப் பற்றி ஆழமாக யோசிக்க வேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தியிருக்கிறோம். அவர்களின் உண்மையான பிரச்சினையைத் தமிழ்நாட்டில் உள்ள மீனவ சங்கங்களுக்குத் தெரிவிக்கவும், இருதரப்பும் கலந்து பேசித் தீர்வு காணவும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். இருவேறு தேசமாகப் பிரிந்திருந்தாலும் தொப்புள் கொடி உறவுகளுக்குள் எந்தப் பிணக்கும் நேராத நிலையை இந்த முயற்சி ஏற்படுத்தும் என நம்புகிறோம்.”
இவ்வாறு செல்வராஜ் தெரிவித்தார்.