Published : 09 Sep 2020 04:17 PM
Last Updated : 09 Sep 2020 04:17 PM

3 ஆண்டுகளாக ஆன்லைன் வகுப்புகள், திருக்குறள் பயிற்சி, கல்வி உதவித்தொகை: சிறந்த பள்ளிக்கான மாநில விருது பெற்ற கோனேரிக்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளி!

விருதுடன் ஆசிரியர் ஆரோக்கியராஜ்.

கரோனாவுக்கு முன்பிருந்தே 3 ஆண்டுகளாக ஸ்கைப் மூலம் ஆன்லைன் வகுப்புகள், கணினி ஆய்வகம், திருக்குறள் பயிற்சி, கல்வி உதவித்தொகை, கிராம மேம்பாடு ஆகியவற்றைச் சாத்தியமாக்கி, விழுப்புரம் மாவட்டம், கோனேரிக்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளி சிறந்த பள்ளிக்கான தமிழக அரசின் மாநில விருதைப் பெற்றுள்ளது.

இதைச் சாத்தியமாக்கியது குறித்து அப்பள்ளியின் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர் ஆரோக்கியராஜ், 'இந்து தமிழ்' இணையதளத்திடம் விரிவாகப் பேசினார்.

''முதன்முதலில் அப்துல் கலாம் கண்ட கனவை நனவாக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் என்ற கருத்தாக்கத்தில், ''லட்சிய இந்தியனின் சபதம் ஏற்போமே'' என்ற பெயரில் இசை ஆல்பம் தயாரித்தோம். அதை கலாம் படித்த அண்ணா பல்கலைக்கழகத்திலேயே வெளியிட்டோம்.

தூய்மையில் புதுமை

பள்ளியைப் பெருக்குபவர் இறந்துவிட்ட பிறகு, புதிதாய் யாரும் வேலைக்கு வரவில்லை. மைதானத்தில் குப்பைகள் குவிந்தன. நிதித் தட்டுப்பாடு என்றாலும் மாணவர்களை அதில் ஈடுபடுத்தக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். என்ன செய்யலாம் என்று யோசித்தபோது ஓர் உபாயம் தோன்றியது. பனங்காய் வண்டி போல, சைக்கிள் சக்கரங்களை நீளக்குச்சி ஒன்றின் இரு முனையிலும் கட்டிக்கொள்ள வேண்டும். அதில் பிரம்பைத் (கோரை வகையிலான) துடைப்பமாகக் கோத்துக்கொண்டோம். அவற்றின் மூலம், மைதானத்தை எளிதில் பெருக்க முடிந்தது. இந்தச் செயல்திட்டம் 2016-ம் ஆண்டின் 'டிசைன் ஃபார் சேஞ்ச்' தேசிய விருதுக்கு முதல் இரண்டு இடத்துக்கான போட்டியில் தேர்வு செய்யப்பட்டது.

சாத்தியமான கணினி ஆய்வகம்

கணினியின் மூலம் மாணவர்களின் அறிவை மேம்படுத்தத் திட்டமிட்டோம். ஆய்வகம் அமைப்பதற்கு ரூ.5,16,470 தொகை தேவைப்பட்டது. மாணவர்களின் பெற்றோரிடமும், சுற்றியுள்ள 3 கிராம மக்களிடமும் போய் நின்றோம். அன்றாடப் பாட்டுக்கே அல்லாடும் மக்களிடம் என்ன இருக்கும்? ஆனாலும் எங்களை நம்பி, தங்களிடம் இருந்த 5, 10, 20, 100 ரூபாயை அளித்தனர். ஜப்பானில் இருந்து பாரிவேல் முருகன் என்பவர் ரூ.80 ஆயிரம் அளித்தார். ஆசிரியர்கள் ரூ.30 ஆயிரம் கொடுத்தோம். மதிப்பீட்டின் மூன்றில் ஒரு பங்குத்தொகையான 1,72,157 ரூபாயை அரசிடம் அளித்தோம். அரசே 7.5 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கணினி ஆய்வகத்தை அமைத்துத் தந்தது.

சுய தன்னிறைவுத் திட்டத்தின் மூலம் பொதுமக்கள் பங்களிப்பில் மாநிலத்திலேயே நிறைவேற்றப்பட்ட முதல் திட்டம் இது. ஒரு நடுநிலைப் பள்ளியில் ஏசி வசதியுடன் கூடிய 25 தரமான 25 கணினிகள் நிறுவப்பட்டன. உதயசந்திரன் ஐஏஎஸ் இதைத் திறந்துவைத்தார்.

சகல வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை

பெயருக்கு ப்ரொஜெக்டர், எல்சிடி திரை என்றில்லாமல் சுவர், தரமான பெயிண்ட், டைல்ஸ், ஏசி, மைக், ஆடியோ சிஸ்டம் என சகல வசதிகளும் கொண்ட ஸ்மார்ட் வகுப்பறையை உருவாக்கினோம். அங்கே தொழில்நுட்பம், அறிவியல், கணிதம் ஆகியவை செயல்முறைக் கற்றல், காணொலி, விளையாட்டுகள் மூலம் கற்பிக்கப்படுகின்றன. ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் செலவில் ஸ்மார்ட் வகுப்பறையை உருவாக்க அமெரிக்காவில் உள்ள கவிதா பாண்டியன் என்பவர் உதவினார்.

இங்கு தினந்தோறும் ஸ்கைப் மூலம் அமெரிக்காவில் இருந்து ஆங்கில வகுப்புகள் கற்பிக்கப்படுகின்றன. 1 முதல் 5-ம் வகுப்பு வரை கடந்த 3 ஆண்டுகளாகக் கற்பித்தல் நடைபெறுகிறது. Our Village Our responsibility என்ற அமைப்பு இதைச் சாத்தியப்படுத்தி உள்ளது.

திருக்குறள் பயிற்சி

தனியாக நியமிக்கப்பட்ட திருக்குறள் ஆசிரியர் மூலம் வாரந்தோறும் அனைத்து மாணவர்களுக்கும் குறள்கள் கற்பிக்கப்படுகின்றன. பள்ளியில் படிக்கும் 150 மாணவர்களுக்கும் 100 திருக்குறள் தெரியும். 30 பேருக்கு 500 குறள்கள் தெரியும். 15 பேருக்கு 1000 குறள்கள் அத்துப்படி. கரோனாவால் 1,330 குறள்களையும் ஒப்பிப்பது தற்காலிகமாகத் தடைப்பட்டுள்ளது. பயிற்சிக்கு. மருத்துவர் சேவியர் 3 ஆண்டுகள் நிதி வழங்கி வருகிறார்.

சொந்தமாக கிராமியக் கலைக்குழு

பள்ளி மாணவர்களின் ஆர்வத்தைப் பார்த்து கிராமிய இசைக் கருவிகளைச் சொந்தமாகவே வாங்கி வைத்தேன். ஆண்டுதோறும் மே மாத விடுமுறையில் கிராமியக் கலைகள் குறித்த பயிற்சிகளை மாணவர்கள் எடுத்து வருகின்றனர். 2015-ல் சொந்தமாகவே கிராமியக் கலைக்குழுவை பள்ளியில் உருவாக்கி, மற்ற பள்ளி, கல்லூரிகளிலும் கலைகளை நிகழ்த்தி வருகிறோம்.

பள்ளியே உருவாக்கிய ப்ரீகேஜி வகுப்பு

ப்ரீகேஜி வகுப்பு இருந்தால் மாணவர் சேர்க்கை அதிகமாகும் என்ற நோக்கில் ரூ.1.20 லட்சம் செலவில் நாங்களே கட்டிவிட்டோம். இந்த வண்ணமயமான மழலை வகுப்பறைக்குத் தனி ஆசிரியரும் நியமிக்கப்பட்டுள்ளார். லீனஸ் என்னும் ஆசிரியை இதற்கு நிதியுதவி செய்தார். பிறகு ஆசிரியர்களே கொஞ்சம் பணம் போட்டு வழங்கிவிடுகிறோம்.

கல்வி உதவித் தொகை

பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதி எங்களுடையது. போதிய விழிப்புணர்வு இல்லாததால் காடுகளுக்கு வேட்டைக்குச் செல்வது, வேலைக்குச் செல்வது என மாணவர்களிடையே இடைநிற்றல் ஏற்படுவது சகஜம் என்பதால், ஒவ்வோராண்டும் மாணவர்களுக்கு ரூ.1000 கல்வி உதவித்தொகை வழங்குகிறேன். பணமாக அல்லாமல், பொருளாக வழங்கிவிடுகிறோம். அரசு தரும் ரூ.500 தாண்டி, நாங்கள் பொருட்களாக உதவித்தொகை வழங்குவதால், இடைநிற்றல் கணிசமாகக் குறைந்துள்ளது.

முகில் கல்விக் கரங்கள் அமைப்பு, 2020-ம் ஆண்டு கோனேரிக்குப்பம் பள்ளி மாணவர்கள் 35 பேர் கல்லூரிப் படிப்பு தொடர, உதவி வருகிறது. சென்ற ஆண்டு 17 மாணவர்களுக்கு ஜப்பான் வாழ் தமிழர்கள் உதவினர்.

கிராம மேம்பாடு

கோனேரிக்குப்பம் பள்ளிக்கு அருகில், 500 மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிப்பாக்கம் என்ற பழங்குடி கிராமத்தைத் தத்தெடுத்துள்ளோம். பள்ளி சார்பில் தண்ணீர் டேங்க், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்துள்ளோம். அருட்தந்தை பெஞ்சமின் இதற்கு உதவி செய்தார்.

பள்ளி மேலாண்மைக் குழுக் கணக்கு

பள்ளிக்கும் மாணவர்களுக்காகவும் கொடையாளர்கள் அளிக்கும் நிதியைத் தனிப்பட்ட கணக்கில் பெறுவதில்லை. பள்ளிக்கென உள்ள பள்ளி மேலாண்மைக் குழுவில் அனுப்பச் சொல்லி அதில் இருந்து எடுத்துக் கொள்கிறோம். நாங்கள் செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கைப் பராமரிக்கிறோம்.

இவை அனைத்தையும் பார்வையிட்டு, தமிழக அரசு சிறந்த பள்ளிக்கான மாநில விருதை வழங்கியுள்ளது'' என்றார் ஆசிரியர் ஆரோக்கிய ராஜ்.

க.சே. ரமணி பிரபா தேவி தொடர்புக்கு--> ramaniprabhadevi.s@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x