அரசின் சிறப்பான நடவடிக்கையால் கரோனா உயிரிழப்பைத் தடுத்துள்ளோம்: முதல்வர் பழனிசாமி பேச்சு

அரசின் சிறப்பான நடவடிக்கையால் கரோனா உயிரிழப்பைத் தடுத்துள்ளோம்: முதல்வர் பழனிசாமி பேச்சு
Updated on
2 min read

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, வீடு திரும்புகின்ற சூழ்நிலையைத் தமிழகத்தில் உருவாக்கப்பட்டதால் அரசு, சரியான நடவடிக்கைகளை எடுத்த காரணத்தினால் இறப்பு சதவீதம் குறைந்திருக்கிறது என முதல்வர் பழனிசாமி பேசினார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்து இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

“திருவண்ணாமலை மாவட்டம் என்றாலே தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றாகத் திகழக்கூடிய அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்தான் அனைவரின் நினைவிற்கும் வரும். அப்படிப்பட்ட புனிதமான இடத்தில், உரிய காலத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இறைவனின் அருளால் தமிழகம் பல்வேறு வளர்ச்சிகளை அடைந்து கொண்டிருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தின் பிரதான தொழிலாக இருக்கக்கூடிய வேளாண் தொழிலில் சுமார் 60 சதவிகித மக்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். நெல் உற்பத்தியாகக்கூடிய மாவட்டமாக இருப்பதால் அரிசிக்குப் பெயர் பெற்ற மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம். இந்த அரிசிக்கு தமிழகத்தில் தனிச்சிறப்பு உண்டு.

அத்தகைய உற்பத்தியை செய்கின்ற வேளாண் பெருமக்களை வணங்குகிறேன். மேலும், இது கைத்தறி நெசவு செய்யும் நெசவாளர்கள் நிறைந்த பகுதி. பட்டுத் தொழிலில் சிறந்து விளங்கக்கூடிய மாவட்டம். இந்த மாவட்டத்தின் ஆரணிப் பட்டுக்குத் தமிழகம் மட்டுமன்றி, உலகம் முழுவதும் தனி அந்தஸ்து இருக்கிறது. இந்தப் பட்டுக்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டிருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரம்பக் காலகட்டத்தில் குறைவாக இருந்த கரோனா வைரஸ் நோய்த் தொற்று, வெளியூர் மற்றும் வெளி மாநிலத்தவர்கள் மூலம் பல்வேறு இடங்களில் அதிகரித்ததை, படிப்படியாகக் குறைக்கக்கூடிய வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருவதற்கு சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சித் துறையும் துணை நிற்கின்றன.

இது எளிதாகப் பரவக் கூடியது என்று நான் அடிக்கடி குறிப்பிட்டு வருகிறேன். இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடித்து, குணமடையச் செய்யக்கூடிய சூழ்நிலை இல்லாத நிலையில், இந்த நோயின் தன்மை மற்றும் வீரியத்தை அறிந்து பொதுமக்கள் அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

ஏற்கெனவே, ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறக்கூடியவர்களுக்கு இந்நோய்த் தொற்று ஏற்பட்டால், அவர்களைக் குணப்படுத்துவது கடினமாக உள்ளது. நேரடியாக கரோனா வைரஸால் தாக்கப்பட்டு இறந்தவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவு என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கெனவே ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் கவனமாக பார்த்துக் கொண்டால்தான் இந்த நோய்த் தொற்றிலிருந்து அவர்களைப் பாதுகாத்து கொள்ள முடியுமென்று அரசு தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

கரோனா தொற்றுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காத சூழ்நிலையில், மருத்துவர்களின் தனித்திறமை காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து குணமடையச் செய்யக்கூடிய நிலையைக் காண முடிகிறது.

இன்றைக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, வீடு திரும்புகின்ற சூழ்நிலையைத் தமிழகத்தில் நாம் பார்க்கின்றோம். அரசு, சரியான நடவடிக்கைகளை எடுத்த காரணத்தினால் இறப்பு சதவீதம் குறைந்திருக்கிறது.

எல்லா மாவட்டங்களிலும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அந்த காய்ச்சல் முகாம்களுக்குச் சென்று பரிசோதனை செய்து, தொற்று இருந்தால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் கரோனா வைரஸ் நோய்ப் பரவல் கட்டுப்படுத்தப்படுகிறது.

அதுமட்டுமல்ல, மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் நோய்ப் பரவல் ஏற்படும் பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று ஆய்வு செய்து அவர்களுக்கு சளி, காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி போன்றவை இருக்கின்றதா அல்லது உடல் சோர்வு தொடர்ந்து இருக்கின்றதா என்பதைக் கேட்டறிந்து, அந்தத் தகவல்கள் சுகாதாரத் துறைக்குத் தெரிவிக்கப்பட்டு, அதனடிப்படையில் அவர்களை மருத்துவமனையில் சேர்த்து உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தமிழகத்தில் இதுபோன்று சிறப்பான நடவடிக்கைகளை எடுத்த காரணத்தால், கரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. இந்நோய்த் தொற்று ஏற்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்காக போதுமான மருத்துவமனைகளை உருவாக்கி, போதிய படுக்கை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன. மேலும், சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவ உபகரணங்கள் போதிய அளவு கையிருப்பில் இருக்கின்றன.

மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் முழு அளவில் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இன்னும் கூடுதலாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வேண்டுமென்று சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், கூடுதலாக மருத்துவர்கள் வேண்டுமென்று கேட்டிருக்கிறார்கள், அது அரசின் பரிசீலனையில் இருந்து கொண்டிருக்கிறது என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

அதிகமாக மக்கள் வசிக்கின்ற காலனி போன்ற பகுதிகளில் தலைவலி, காய்ச்சல் போன்றவை வரும்பொழுது, அவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக அரசு தனிக்கவனம் செலுத்தி, ஒரு சிறப்பு திட்டமாக மினி கிளினிக் ஒன்று ஆரம்பிக்கப்படும் என்று நேற்றைய தினம் அறிவித்திருக்கின்றோம்.

அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக் ஆரம்பிக்கப்படும். மினி கிளினிக்கில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் ஆகியோர் இருப்பர். கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருக்கும் இந்தச் சூழ்நிலையில், காய்ச்சல், தலைவலி போன்றவை ஏற்பட்டால் கூட, அதற்கு சிகிச்சை பெற சிரமமாக உள்ளது.

இந்தக் குறைகளைப் போக்க வேண்டுமென்பதற்காக, அரசு, இந்த மினி கிளினிக்குகளை உருவாக்க இருக்கிறது என்ற செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதனால் ஏழை, எளிய மக்கள் மற்ற நோய்களிலிருந்து விடுபடுவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும்’’.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in