

காவலர்கள் பிறந்த நாளை அந்தந்த காவல் நிலையங்களில் கொண்டாடி, வாழ்த்து தெரிவிக்கும் முறையை தூத்துக்குடியில் முதன்முறையாக ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.
தென் மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பணிபுரியும் காவல்துறையினருக்கு அவர்களது பிறந்த நாள் அன்று விடுமுறை வழங்கவும், பிறந்த நாளுக்கு முந்தைய நாள் அந்தந்த காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் சக காவலர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்குமாறு தென்மண்டல ஐ.ஜி எஸ்.முருகன் அறிவுறுத்தியிருந்தார்.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் முதலாவது பிறந்த நாள் விழா ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் நேற்று மாலை கொண்டாடப்பட்டது.
இந்த காவல் நிலையத்தில் பணிபுரியும் முதல் நிலைக்காவலர் முகமது யூசுப்கானுக்கு இன்று பிறந்த நாள் ஆகும். எனவே, அவரது பிறந்த நாள் ஆறுமுகநேரில் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
அவருக்கு எஸ்.பி கேக் ஊட்டிவிட்டு, மாவட்ட காவல்துறை சார்பாக பிறந்த நாள் வாழ்த்து மடல் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் திருச்செந்தூர் டிஎஸ்பி பாரத் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.