

தமிழகத்தில் விவசாயிகளுக்கான நிதியுதவி திட்ட முறைகேட்டில் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் தமிழக அரசு விசாரிக்க வேண்டும் என தமிழக பாஜக பொதுச் செயலர் சீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மதுரையில் 300-க்கும் மேற்பட்ட முடி வெட்டும் தொழிலாளர்கள் பாஜக பொதுச் செயலர் சீனிவாசன் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தனர்.
முன்னதாக சீனிவாசன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிரதமரின் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 தவணைகளில் ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் இந்த திட்டத்தில் ரூ. 110 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளது. இப்பணம் முழுவதும் திரும்ப பெறப்படும் என வேளாண் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.
பணத்தைத் திரும்ப பெறுவதுடன் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள், போலி பயணாளிகள், உடந்தையாக செயல்பட்ட அதிகாரிகள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வட மாவட்டங்களில் இந்த முறைகேட்டில் சில அரசியல் கட்சிகள், அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வருகின்றன. அரசியல் கட்சிகள், சமூ அமைப்புகள் திட்டமிட்டு பல ஆயிரம் போலி பயணாளிகளை திட்டத்தில் சேர்த்து மத்திய அரசின் நிதியை கையாடல் செய்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழக அரசு விசாரித்து உண்மையாக இருந்தால் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நல வாரியங்களிலும் முறைகேடு
மாநில பாஜக அமைப்புசாரா பிரிவு தலைவர் பாண்டித்துரை கூறுகையில், கரோனா காலத்தில் பாஜக சார்பில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.8.87 கோடி நிவாரண உதவி கிடைக்க செய்யப்பட்டுள்ளது. அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மத்திய அரசு பாதுகாத்துள்ளது.
தமிழகத்தில் 17 அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்கள் உள்ளன. கரோனா காலத்தில் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் முறைகேடு நடைபெற்றுள்ளது.
நல வாரியங்களில் உறுப்பினர்கள் பதிவு கடந்த 4 மாதங்களாக நடைபெறவில்லை. கடந்த 3 மாதங்களாக நல வாரியங்கள் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்காக ரூ.364 கோடி செலவு செய்ததாக பட்டியல் வெளியிட்டுள்ளனர். இதில் பெரியளவில் முறைகேடு நடைபெற்றுள்ளது.
தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாக அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவில்லை. நிதி உதவியும் வழங்கவில்லை. இது தொடர்பாக விளக்கம் கேட்டு ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களிடம் இம்மாத இறுதிக்குள் மனு கொடுத்து, நல வாரிய செலவு கணக்கு விபரங்களை பொதுமக்கள் பார்வைக்க வைக்க வலியுறுத்த முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.