

கரோனா தொற்றுப் பரவத் தொடங்கி 5 மாதங்களுக்கு மேலாகியும் இன்றும் குறையத் தொடங்காத ஒரே நாடு இந்தியாதான். எனவே, தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மக்கள் இதைக் கருத்தில் கொண்டு மிகவும் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் கரோனா தொற்று குறித்து ஜனவரி மாதத்தில் ஆங்காங்கே பேசப்பட்டது. மார்ச் மாதத்தில் இந்தியாவின் மொத்த எண்ணிக்கையே ஆயிரக்கணக்கில் இருந்த நிலையில், அடுத்தடுத்த மாதங்களில் பல்கிப் பெருகி இன்று உலகின் இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 89 ஆயிரத்து 706 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த தொற்று எண்ணிக்கை 43 லட்சத்து 70 ஆயிரத்து 128 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி 20 லட்சத்தையும், 20-ம் தேதி 30 லட்சத்தையும், கடந்த 5-ம் தேதி 40 லட்சத்தையும் கரோனா தொற்று எட்டியது குறிப்பிடத்தக்கது.
கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் ஒரு நாளில் அதிகபட்ச எண்ணிக்கை இந்தியாவில் உள்ளது. இந்நிலையில் கரோனா தொற்று பல மாநிலங்களில் வேகமாக அதிகரித்து வருகிறது. ஆனாலும், தொடர்ந்து 5 மாதம் பொது முடக்கம் காரணமாக பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு ஊரடங்கு முற்றிலும் தளர்வுகளுடன் நீட்டிக்கப்படுகிறது.
பொதுப் போக்குவரத்து அனுமதி, இ-பாஸ் ரத்து, வணிக வளாகங்கள் திறக்க அனுமதி, சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டுத் தலங்கள் திறப்பு எனத் தளர்வுகள் காரணமாக பொதுமக்கள் மொத்தமாக ஒன்றுகூடுதல் நடக்கிறது. இதனால் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்து பாதுகாப்பு நடைமுறைகளை அமல்படுத்த வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதுவரை 5 மாதங்களாக பாதிப்பு குறையாத ஒரே நாடு இந்தியாதான். இதைக் கருத்தில் வைத்து எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
ராமதாஸின் ட்விட்டர் பதிவு:
“கரோனா தினசரி பாதிப்புகள் அமெரிக்காவில் 28,561 ஆகவும், பிரேசிலில் 17,330 ஆகவும் குறைந்துவிட்டது. ஆனால், இந்தியாவில் 89,852 ஆக அதிகரித்துவிட்டது. உலக அளவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட 2.47 லட்சம் தொற்றுகளில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் ஏற்பட்டவை.
கரோனா தொற்றுப் பரவத் தொடங்கி 5 மாதங்களுக்கு மேலாகியும் இன்றும் குறையத் தொடங்காத ஒரே நாடு இந்தியாதான். எனவே, தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மக்கள் இதைக் கருத்தில் கொண்டு மிகவும் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும்”.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.