Published : 09 Sep 2020 01:54 PM
Last Updated : 09 Sep 2020 01:54 PM

''அதிமுக அரசின் ஊழல்களுக்கு பாதுகாவலராக இருக்கும் மத்திய பாஜக அரசு''- திமுக கடும் கண்டனம்

அதிமுக அரசின் ஊழல்களுக்கு மத்திய பாஜக அரசு பாதுகாவலராக இருப்பதாக, திமுக பொதுக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

திமுக பொதுக்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் காணொலிக் காட்சி வாயிலாக இன்று (செப். 9) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

"இந்தியக் குடிமைப் பணிகள் தேர்வில் சமூக அநீதி களைந்திட நடவடிக்கை எடுத்திடுக!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியுள்ள 2019-ம் ஆண்டு இந்தியக் குடிமைப் பணிகள் தேர்வில், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவரின் சமூக நீதி உரிமை அநியாயமாகத் தட்டிப் பறிக்கப்பட்டுள்ளதற்கு இந்தப் பொதுக்குழு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்தியக் குடிமைப் பணிகளுக்கான தேர்வின் முடிவுகள் கடந்த 4.8.2020 அன்று வெளியிடப்பட்டன. அதற்கான 'கட்-ஆப்' மதிப்பெண்கள் பட்டியலில், மத்திய பாஜக அரசு, அவசர அவசரமாக சென்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டுக் கொண்டு வந்த, முன்னேறிய உயர் வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு, இந்தக் குடிமைப் பணிகள் தேர்வின் ஒவ்வொரு கட்டத்திலும், சமூக நீதிக்குப் பெரும் பாதகம் விளைவித்துள்ளதைக் காண முடிகிறது.

முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் உள்ளிட்ட அனைத்துக் கட்டங்களிலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்குப் பிறகு, வரிசையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தினர், பழங்குடியினத்தினர் ஆகியோர் நிற்க வேண்டிய அநீதி இழைக்கப்பட்டு, வெளிப்படைத் தன்மையைப் பின்பற்றாமல் இந்தத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன என்பது கவலையளிக்கிறது.

இந்தியாவின் முன்னேற்றத்தில் பங்கெடுக்க, அதற்கான நிர்வாகக் கட்டமைப்பில் இடம்பெறும் உரிமைபெற இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இந்தியக் குடிமைப் பணிகள் தேர்வு குறித்து, பாரபட்சமற்ற, நேர்மையான விசாரணை நடத்தி, நியாயம் வழங்கி, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியினத்தினரின் சமூக நீதி எந்தவிதத் தடையுமின்றி, தொடர்ந்து உறுதி செய்யப்பட வேண்டும் என்று இந்தப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

திமு அரசின் ஊழல்களுக்குப் பாதுகாவலராக இருக்கும் மத்திய பா அரசுக்குக் கண்டனம்!

வரலாறு காணாத வகையில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சி ஏப்ரல் - ஜூன் மாதத்தில் 23.9 சதவீதமாக வீழ்ச்சியடையக் காரணமாயிருந்து, கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாற்றம் அடைந்து, இதுவரை இல்லாத அளவுக்கான வேலையில்லாத் திண்டாட்டத்தை உருவாக்கி, அரசியலமைப்புச் சட்டம் உறுதியளித்துள்ள கூட்டாட்சித் தத்துவம், மதச்சார்பின்மை, ஜனநாயகம் ஆகிய நெறிகளுக்கு விரோதமாக மத்தியில் சர்வாதிகார ஆட்சியை பாஜக நடத்தி வருவதற்கு இந்தப் பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

நான்கு ஆண்டுகளாக, அதிமுகவின் அடுக்கடுக்கான ஊழல்களுக்குப் பாதுகாவலராக விளங்கி, ஊழலில் ஊறிப் போயிருக்கின்ற ஆட்சியாளர்களை மிரட்டி தமிழக உரிமைகளைப் பறித்து, தமிழக மக்களுக்கு விரோதமான திட்டங்களை மாநிலத்தில் புகுத்தி, தமிழ்மொழியைப் பின்னுக்குத் தள்ளி இந்தியைத் திணித்து, தமிழகக் கலாச்சாரத்திற்கும் பண்பாட்டுக்கும் எதிரான நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு எடுத்து வருவதோடு, வெறுப்புணர்வுகளை விதைத்து, சமூக-மத நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலையும் உருவாக்கி வருகிறது.

சுங்கக் கட்டணம் உயர்வு, ஏழை எளிய மக்களுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மானியம் ரத்து, ஒவ்வொரு நாளும் பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, மின்சாரத் திருத்தச் சட்ட மசோதாவின் மூலம் விவசாயிகளின் இலவச மின்சாரம் ரத்து, அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், வேளாண் உற்பத்தி ஊக்குவிப்புச் சட்டம், விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் வழங்கும் வேளாண் சேவைகள் திருத்தச் சட்டம் என கரோனா காலத்தை, உழைப்போருக்கும் விவசாயிகளுக்கும் எதிரான அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கும் காலமாக மாற்றி, தனது பெரும்பான்மை பலத்தை தவறாகப் பயன்படுத்தி, விமான நிலையங்கள், எல்.ஐ.சி நிறுவனம் போன்றவற்றைத் தனியார்மயமாக்கி, நாட்டின் சமூக - பொருளாதார - தொழில் கட்டமைப்புகளுக்கும், அடித்தட்டு மக்கள் போராடிப் பெற்ற சமூக நீதிக்கும் விரோதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற பாஜகவுக்கு இந்தப் பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

அதிமுக அரசின் ஊழல்களைக் கண்டுகொள்ளாமல் அவற்றுக்கு ஒத்துழைப்பு நல்கி, தமிழகத்தில் படுமோசமானதோர் அரசு நடப்பதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து, தமிழகத்தின் உரிமைகளைப் பறித்து, மக்கள் விரோதத் திட்டங்களைத் திணித்திடும் மத்திய பாஜக அரசின் கபட முகத்தை மக்கள் மன்றத்தில் உணர்த்திடும் ஜனநாயகக் கடமையைச் செவ்வனே ஆற்றுவதென இந்தப் பொதுக்குழு தீர்மானிக்கிறது.

மக்கள் விரோத திமு ஆட்சியை வீழ்த்திட திமுகவை ஆட்சிப் பீடம் ஏற்றிட திமுக தலைவரை முதல்வராகப் பொறுப்பேற்கச் செய்திட சூளுரை மேற்கொள்வோம்!

அதிமுக அரசு, ஊழலின் உருவகமாகி, தமிழக மக்களைத் தணியாத இன்னல்களில் தள்ளி, மக்கள் விரோத அரசாக, 'கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன்' என்ற ஒரே நோக்கத்திற்காகச் செயல்பட்டு, மக்களுக்கான பணிகளில் முற்றிலும் தோற்றுவிட்டதொரு நிர்வாகத்தை நடத்தி வருவதற்கு இந்தப் பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

அனைத்துத் துறை டெண்டர்களிலும் ஊழல், ஆரவாரமான வெற்று அறிவிப்புகள், மும்மொழித்திட்டத்தைத் திணிக்கும் புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு, இந்தித் திணிப்புக்கு மறைமுக ஆதரவு, நீட் தேர்வுக்கு விலக்கு வாங்க முடியாமல், அந்தத் தேர்வு கரோனா காலத்தில் நடத்துவதைக் கூட எதிர்க்க இயலாத போக்கு, விவசாயிகளுக்கு எதிரான சேலம் எட்டுவழிச் சாலையை நிறைவேற்றியே தீருவோம் என்ற இரக்கமற்ற போக்கு, நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு என்று கூறிவிட்டு இதுவரை அவசரச் சட்டம் பிறப்பிக்காமல் காலம் தாழ்த்துவது, தேர்வுக் கட்டணம் செலுத்த இயலாத மாணவர்களைத் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க மறுப்பு, பத்திரிகைகள் மீது அடக்குமுறை, நேரடிக் கொள்முதல் நிலையங்களை போதிய அளவு திறக்காமல் விவசாயிகளை வேதனைக்குள்ளாக்கியது, 426-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை, உலக முதலீட்டாளர்கள் மாநாடு இரண்டு முறை நடத்தி படுதோல்வி, அந்நிய முதலீடு திரட்டச் சென்று தோல்வி, ஆடம்பரச் செலவு, கரோனா பேரிடர் காலப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என்று முதலீடு வராத ஒப்பந்தங்களை இயற்றி ஏமாற்று நாடகம், தொழில் வளர்ச்சியில் பின்னடைவு, 4.56 லட்சம் கோடி ரூபாய்க் கடன்கள், நிதி நெருக்கடி, நாள்தோறும் கொலை, கொள்ளைகள், ஜெயராஜ் - பென்னிக்ஸ் உள்ளிட்டோரின் காவல் நிலைய மரணங்கள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, எதிர்க்கட்சிகள் மீது பொய் வழக்குகள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020-ஐ எதிர்க்க இயலாமை, ஜி.எஸ்.டி. இழப்பீடு மற்றும் நிலுவைத் தொகையைப் பெற முடியாமை, தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ள மாநில உரிமைகளைக் காவு கொடுத்தல், என அதிமுக அரசின் தோல்விகளை வரிசைப்படுத்தினாலும், பட்டியல் முற்றுப் பெறாமல் நீண்டு கொண்டே போகும்.

ஆகவே, இந்த மக்கள் விரோத, ஜனநாயக விரோத, சட்டவிரோத அதிமுக ஆட்சியை சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தலில் வீழ்த்தவும் திமுகவை ஆட்சிப் பீடம் ஏற்றவும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வராக ஆட்சியில் அமர்த்தவும், தமிழகத்தை மீண்டும் முன்னேற்ற வளர்ச்சிப் பாதையில் செலுத்தவும், அரும்பாடுபடுவதென இந்தப் பொதுக்குழு சூளுரை மேற்கொள்கிறது.

ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூட்டின் பலிகளுக்கு நீதி வேண்டும்!

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள மிகவும் முற்போக்கான தீர்ப்பை வரவேற்கும் இந்தப் பொதுக்குழு, இத்தீர்ப்பு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, மனித குலத்தினைக் காப்பாற்றிடும் மகத்தான தீர்ப்பு என்று பெருமிதம் கொள்கிறது.

சுற்றுச்சூழலுக்கும் தங்களின் உயிர்ப் பாதுகாப்புக்கும் பேராபத்தாக இருந்த ஆலையை எதிர்த்து, ஜனநாயக ரீதியில் அமைதியாகப் போராடிய அப்பாவி மக்கள் மீது, கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தி, 13 அப்பாவி உயிர்களைக் கொடூரமாகப் பறித்த அதிமுக அரசின் அட்டூழியச் செயலைத் தமிழக மக்கள் எப்போதும் மறக்கவோ மன்னிக்கவோமாட்டார்கள்.

ஏதுமறியாத மக்கள் கொல்லப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், இதுவரை உரிய நியாயம் கிடைக்காதது குறித்து இந்தப் பொதுக்குழு தனது வேதனையைப் பதிவு செய்து, அந்தத் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டோருக்கு விரைந்து நீதி கிடைத்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது".

இத்தீர்மானங்கள் திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x