Published : 09 Sep 2020 01:49 PM
Last Updated : 09 Sep 2020 01:49 PM

சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை, தேசிய கல்விக் கொள்கைக்கு திமுக கண்டனம்; கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரக் கோரி தீர்மானம்

சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2020, தேசிய கல்விக் கொள்கை ஆகியவற்றுக்கு எதிராக திமுக பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

திமுக பொதுக்குழுக் கூட்டம், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (செப். 9) காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

"தேசிய கல்விக் கொள்கைக்குக் கண்டனம்!

தேசிய கல்விக் கொள்கை 2019 குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 14.7.2019 அன்று வல்லுநர்கள் குழு ஒன்றினை அமைத்து, அறிக்கை பெற்று, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரிடம் 28.7.2019 அன்று அளித்து, அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான, மாணவர்களுக்கு எதிரான, மக்களுக்கு எதிரான 2019 வரைவு தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது; அதைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியிருந்ததை இந்தப் பொதுக்குழு நினைவுகூர்கிறது.

மும்மொழித் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற மத்திய அரசின் கல்விக் கொள்கை, தமிழகத்தில் அண்ணாவால் அறிமுகம் செய்யப்பட்டு, கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக தொடர்ந்து நடைமுறையில் இருந்துவரும் இருமொழிக் கொள்கைக்கு முற்றிலும் விரோதமானது என்று தெரிவித்து, அந்த மும்மொழித் திட்டத்தை இக்கூட்டம் நிராகரிக்கிறது.

இந்தித் திணிப்பை மும்மொழித் திட்டத்தின் மூலம் தீவிரமாக்க மத்திய பாஜக அரசு தந்திரமாகத் திட்டமிடுவதை இப்பொதுக்குழு ஆணித்தரமாக எதிர்க்கிறது. சம்ஸ்கிருத மொழிக்கு மட்டும் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம், ஏனைய இந்திய மொழிகள் மீது மத்திய பாஜக அரசு கொண்டுள்ள மாற்றாந்தாய் மனப்பான்மையை உணர்த்துகிறது.

ஆனால், ஊட்டச்சத்தையும், ஆரோக்கியத்தையும் இணைத்து வழங்கப்பட வேண்டிய மழலையர் பருவத்தில் முறைசார்ந்த கல்வி, 3, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு; தமிழகத்தில் வெற்றிகரமாக இயங்கும் பிளஸ் 2 கல்விமுறையில் மாற்றம்; தமிழகத்தில் ஏற்கெனவே பல்லாண்டுகளுக்கு முன்பே மக்களால் புறக்கணிக்கப்பட்ட குலக்கல்வித் திட்டத்தின் மறுவடிவமாக வரும் தொழிற்கல்வி; இருக்கின்ற பள்ளிகளையும் மூட வழிவகுக்கும் பள்ளி வளாகங்கள்; ஆசிரியர் தேர்வு, ஆசிரியர் பணி குறித்த தர நிர்ணயம் உள்ளிட்டவை, மாநிலங்களிடம் எஞ்சியிருக்கும் கொஞ்ச நஞ்சம் கல்வி உரிமையிலும் தேவையே இல்லாமல் தலையிட்டு, மத்திய அரசைத் தவிர மாநிலங்களுக்கு கல்விச் சீர்திருத்தம் பற்றி எதுவுமே தெரியாது என்று நினைப்பது சர்வாதிகாரப் போக்காகும்.

உயர்கல்வியில் தன்னாட்சி உரிமை பெற்ற தமிழ்ச் செம்மொழி மத்திய நிறுவனத்தைப் பல்கலைக்கழகங்களுடன் இணைப்பது; மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வதற்கு உயர் கல்வி ஆணையம் அமைப்பது; கலை மற்றும் அறிவியல் பட்டயப் படிப்புகளில் சேரவும் நுழைவுத் தேர்வு; வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை அனுமதிப்பது; மாநிலங்களில் கற்றுக்கொடுக்க வேண்டிய பாடங்களைத் தேசிய அளவில் வகுப்பது; ஆகியவை மாநிலங்களைப் புறக்கணித்து, கல்வியை மையப்படுத்தி வைக்கும் பின்னடைவுப் போக்காகும்.

ஆகவே, பொதுப் பட்டியலில் உள்ள கல்வி, மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே கொண்டு வரப்பட வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை இந்தக் கூட்டம் மீண்டும் வலியுறுத்துகிறது. நாடாளுமன்றம் கூடி, கூட்டாட்சித் தத்துவம், சமூக நீதி, சமத்துவம் ஆகியவை குறித்து அனைத்து மாநிலக் கட்சிகளும் விவாதிக்கும் வரை, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள தேசிய கல்விக் கொள்க 2020-ஐ நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய பாஜக அரசு ஈடுபடக்கூடாது என்றும், தமிழகத்தின் இருமொழித் திட்டத்திற்கு எதிரான இந்தக் கொள்கையை அதிமுக அரசும் கடுமையாக எதிர்த்திட வேண்டும் என்றும் இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2020-ஐக் கைவிடு

புதிய சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை 2020-ஐ வெளியிட்டு, அதன்மீது கருத்துக்கேட்பு என ஒரு கண்துடைப்பு நாடகத்தையும் நடத்தி, அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் கூட இந்த அறிவிக்கையை வெளியிட நீதிமன்றங்களை நாட வேண்டிய பரிதாபமான நிலையை உருவாக்கி, தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வரும் மத்திய பாஜக அரசுக்கு இப்பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

நடைமுறையில் உள்ள சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கையே இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம் இல்லாத திட்டங்களை நிறைவேற்றவும் வழிவகுக்க போதுமானதில்லை என்று, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எல்லாம் குற்றம்சாட்டி வருகின்ற நிலையில், இப்போது வெளியிடப்பட்டுள்ள புதிய வரைவு அறிவிக்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986-ஐ முற்றிலும் நீர்த்துப் போக வைக்கும்.

விவசாயிகளுக்கு எதிரான சேலம் - சென்னை பசுமை வழிச்சாலைத் திட்டம், காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடகம் அணைகட்டும் திட்டம், காவிரி டெல்டா பகுதியில் அதிமுக அரசின் துணையோடு மத்திய அரசு கொண்டு வரும் எண்ணெய்க் கிணறுகள் அமைக்கும் திட்டங்கள், கெயில் குழாய் பதிப்புத் திட்டம், மீத்தேன், நியூட்ரினோ திட்டங்கள் போன்றவை தமிழகத்தையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அச்சுறுத்தும் கடினமான இந்தவேளையில், பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களைப் பலவீனப்படுத்தி, மாநிலச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழுவுக்கு மத்திய அரசே தலைவர் உறுப்பினர்களை நியமிக்க வழி செய்து சுற்றுச்சூழலையும், விவசாயிகளின் வாழ்க்கையையும், வேளாண்மையையும் உருக்குலைக்கும் திட்டங்களை ஊக்குவிக்கக் கொண்டுவரப்பட்டுள்ள மாநில உரிமைகளுக்கு முரணான ஜனநாயக விரோத சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கையை மத்திய பாஜக அரசு, நிபந்தனையின்றித் திரும்பப் பெற்றிட வேண்டும் என்று இப்பொதுக்குழுக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

விவசாயிகள் விரோத கொள்கைகளை மத்திய- மாநில அரசுகள் கைவிட வேண்டும்!

மத்திய பாஜக அரசும், மாநிலத்தில் உள்ள அதிமுக அரசும், விவசாயிகள் விரோத அரசாக செயல்பட்டு வருவதற்கு இந்தப் பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. கர்நாடகாவில் மேகேதாட்டு அணை கட்டுதல், முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுதல், காவிரி டெல்டா பகுதிகளில் எண்ணைய்க் கிணறுகள், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள், பாதுகாப்பு பெட்ரோலிய மண்டலங்கள், நியூட்ரினோ திட்டம், விளை நிலங்கள் வழியாக கெயில் குழாய் பதிப்புத் திட்டங்கள், உயர் மின் கோபுரங்கள் அமைத்தல், சேலம் எட்டு வழிச் சாலைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வேளாண் விரோத திட்டங்களை மத்திய பாஜக அரசு தமிழகத்தில் புகுத்தி, அதை தட்டிக் கேட்க முடியாமல், கைகட்டி வேடிக்கை பார்த்து நிற்கிறது அதிமுக அரசு.

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய மறுப்பது, நூற்றுக்கணக்கான கிராமங்களில் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் வழங்காதது, பம்புசெட்டுகளுக்கு இலவச மின்சாரம் கேட்டு அளித்த விண்ணப்பங்களுக்கு இணைப்புக் கொடுக்க 19 வருடங்களாக விவசாயிகளை காத்திருக்க வைப்பது, விதை நெல்லுக்கு வழங்கும் அரசு மானியத்தில் கொள்ளை, உளுந்து போன்ற சிறுதானிய விதைகளை தனியாருக்கு விற்று விட்டு விவசாயிகளுக்கு துரோகம், பயிர்க் கடன் வழங்குவதில் முறைகேடு, பி.எம். கிசான் நிதியுதவித் திட்டத்தில் முறைகேடு, காவிரி நீர்ப்பாசனக் கால்வாய்கள் தூர்வாரும் பணிகளை விவசாயிகள் சங்கங்களுக்குக் கொடுக்காமல் அதிமுகவினருக்குக் கொடுத்து பணி செய்யாமலேயே பணத்தைச் சுருட்டியுள்ள முறைகேடுகள், விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கொடுக்க முன் வராதது, நெல் - கரும்பு கொள்முதல் விலையை உயர்த்திக் கொடுக்க மறுப்பது, முழுமையாகத் தோற்று விட்ட உழவன் செயலி - இயந்திர நடவு மானியத்தை உயர்த்த மறுப்பது, அறுவடை இயந்திரங்கள் போதிய எண்ணிக்கையில் இல்லாமல் அவதி போன்றவற்றால் தமிழகத்தில் விவசாயிகள் அதிமுக ஆட்சியில் கடும் வாழ்வாதார இழப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

மத்திய - மாநில அரசுகளின் விவசாயிகள் விரோதப் போக்கினால் இன்றைக்கு நாடு முழுவதும் 42 ஆயிரத்து 480 விவசாயிகளும், தினக்கூலிகளும் தற்கொலை செய்துகொள்ளும் சோகமயமான சூழல் உருவாகியிருப்பதை இந்தப் பொதுக்குழு மிகுந்த கவலையுடன் பதிவு செய்கிறது.

ஆகவே மத்திய, மாநில அரசுகள் உடனடியாக விவசாயிகள் விரோதக் கொள்கைகளையும், நடவடிக்கைககளையும் கைவிட்டு, விளைபொருள்களுக்கு நியாயமான உரிய விலை கிடைக்கவும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திடவும் முன்வர வேண்டும் என்று இந்தப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது".

இத்தீர்மானங்கள் திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x