

விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகளை அகற்ற வலியுறுத்தி கயத்தாறு அருகே காங்கிரஸார் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கயத்தாறு, ஓட்டப்பிடாரம் வட்டங்களில் ஏராளமான காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள காற்றாலைகளில் விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகளை அகற்ற வேண்டும்.
மரபுசாரா எரிசக்தி துறையின் கீழ் இயங்கி வரும் திட்டங்களுக்கு விதிவிலக்கு அளித்த சுற்றுச்சூழல் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி செப்.9-ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸார் அறிவித்திருந்தனர்.
அதன்படி இன்று காலை 10 மணிக்கு கயத்தாறு அருகே கரிசல்குளம் பகுதியில் காற்றாலைகள் உள்ள இடத்தில் காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.பிரேம்குமார் தலைமை வகித்தார்.
இதில், எஸ்.சி துறை மாநில துணைத் தலைவர் ஏ.மாரிமுத்து, மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.உமாசங்கர், கயத்தாறு ஒன்றிய தலைவர் எம்.செல்லத்துரை, மத்திய வட்டார தலைவர் கருப்பசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் முழங்கினர்.