ரிசர்வ் போலீஸ் படை துணை கமாண்டன்ட் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

ரிசர்வ் போலீஸ் படை துணை கமாண்டன்ட் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
Updated on
1 min read

பூந்தமல்லியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை துணை கமாண்டன்ட் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி, கரையான்சாவடியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 77-வது பட்டாலியன் பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு, கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜன்(50) துணை கமாண்டன்ட்டாக பணிபுரிந்து வந்தார். இவர், மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கம் பகுதியில் வசித்து வந்தார்.

ஸ்ரீஜன் நேற்று காலை வழக்கம்போல பணிக்குச் சென்று, தன்னுடைய ரைபிள் துப்பாக்கியை வாங்கிக் கொண்டு தனது அறைக்கு சென்றுள்ளார். அறைக்குச் சென்ற சிறிது நேரத்தில், அந்த அறையில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது.

இதையடுத்து, அங்கு பணியில் இருந்த சிஆர்பிஎப் வீரர்கள், துணை கமாண்டன்ட் அறைக்குள் சென்று பார்த்தபோது, ஸ்ரீஜன் கழுத்தில் துப்பாக்கியால் சுட்டு ரத்த வெள்ளத்தில் கீழே கிடந்தார். உடனே அவர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஆகவே, ஸ்ரீஜனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்துள்ள பூந்தமல்லி போலீஸார் ஸ்ரீஜனின் அலுவலக அறையில் இருந்து கடிதம் ஒன்றை எடுத்தனர். ஸ்ரீஜன் எழுதியுள்ள அக்கடிதத்தில், அவர் சொந்த பிரச்சினை காரணமாக தற்கொலை செய்துகொள்வதாகவும், தன் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இதனால், குடும்பப் பிரச்சினை காரணமாக ஸ்ரீஜன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என, போலீஸார் தெரிவிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in