

சென்னையில் சுமார் 72 ஆயிரம் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம் நிர்ண யிக்கப்பட்டு உடனடியாக அமலுக்கு வந்தது. அதன்படி, குறைந்தபட்ச கட்ட ணம் ரூ.25, கூடுதலாக கி.மீட்டருக்கு ரூ.12 வசூலிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
திருத்தப்பட்ட புதிய மீட்டர் பொருத்த ஆட்டோ டிரைவர்களுக்கு 2 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது. அதன்பிறகு, மீட்டர் பொருத்தாத மற்றும் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க தொடக்கத்தில் 50 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அந்தக் குழுவினர் தீவிர சோதனை நடத்தி சுமார் 2,500 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர்.
மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட தால் 2 மாதங்களாக அந்தப் பணியில் போலீஸாரும் அதிகாரிகளும் கவனம் செலுத்தினர். இதனால் ஆட்டோக்களை சோதனை செய்யும் பணி குறைந்தது. இதற்கிடையே, ஆட்டோக்களில் மீண்டும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்தன.
தேர்தல் முடிந்துள்ள நிலையில் போக்குவரத்துத் துறையினர் போலீஸாருடன் இணைந்து மீண்டும் சோதனையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். முதல் நாளாக சனிக்கிழமை சென்னையில் 7 இடங்களில் நடத்திய அதிரடி ஆய்வில் அதிக கட்டணம் வசூலித்த 46 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க தற்போது 7 சிறப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் ஆர்டிஓ உள்பட 3 பேர் இருப்பர்.போக்குவரத்து போலீஸார் குழுவும் இருக்கும். சனிக்கிழமை காலை 5 மணி முதல் 7 மணி வரையில் சென்ட்ரல், எழும்பூர் மற்றும் மாம்பலம் ரயில் நிலையங்கள், கோயம்பேடு பஸ் நிலையம் உள்ளிட்ட 7 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில், அதிக கட்டணம் வசூலிக்கப்பட்ட 46 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து சோதனை நடத்தப்படும். காலையில் ரயில் மற்றும் பஸ் நிலையங்கள் முன்பும் மாலையில் மெரினா கடற்கரை, மெகா மஹால்கள் போன்ற பொழுதுபோக்கு இடங்களில் சோதனை நடத்தப்படும். ஆட்டோக்கள் அதிக கட்டணம் வசூல், மீட்டர் பொருத்தாதது உள்ளிட்டவை குறித்து 044 - 26744445, 24749001 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.