

அரியர் தேர்வுகளை ரத்து செய்து, மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கியதை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு, யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:
கரோனா ஊரடங்கை காரணம் காட்டி பொறியியல், எம்சிஏ மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் இறுதி பருவத் தேர்வை தவிர்த்து,அரியர் தேர்வுகள் உள்ளிட்ட அனைத்து பருவத் தேர்வுகளையும் ஒட்டுமொத்தமாக ரத்து செய்து,மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
25 சதவீத மதிப்பெண்கள் பெற்றுதேர்வில் தோல்வியடைந்தவர்களையும், 25 பாடங்களுக்கும் மேலாக அரியர் வைத்துள்ள மாணவர்களையும் ஒரே நேரத்தில் தேர்ச்சி பெற வைப்பது என்பது ஏற்புடையதல்ல. சிண்டிகேட், செனட் மற்றும் அகடமிக் கவுன்சில் கட்டுப்பாட்டில் உள்ள தேர்வு நடைமுறைகளில் தமிழக அரசு தலையிட்டு அறிவிப்பை வெளியிட முடியாது. எனவே இதுதொடர்பான அரசாணைக்கு தடை விதித்து ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கும், இதே கோரிக்கையை வலியுறுத்தி திருச்செந்தூர் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தொடர்ந்த வழக்கும் நேற்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது
அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ‘‘பேரிடர் மேலாண்மை சட்ட விதிகளை பின்பற்றி உரிய உத்தரவுகளை பிறப்பிக்க மாநிலஅரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. மேலும்யுஜிசியின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் பட்சத்தில்தான் அதில்பிரச்சினை ஏற்படும். ஆனால் அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் யுஜிசியின் விதிமுறைகள் மீறப்படவில்லை” என வாதிட்டார்.
மனுதாரர் தரப்பில் இவ்வாறு தமிழக அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது, என வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இதுதொடர்பாக தமிழக அரசு, யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.