

காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடுகளை புதுப்பிக்க நவ.30-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இந்திய அஞ்சல் துறை, அஞ்சல் ஆயுள் காப்பீடு என்ற காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் சேரும் சிலர் இரண்டு, மூன்றாண்டுகளுக்கு சரியாக காப்பீட்டுத் தொகையை செலுத்துகின்றனர். அதன் பின்னர் சரியாகக் கட்டுவதில்லை.
இதனால், 5 ஆண்டுகளுக்கு மேல் காப்பீட்டுத் தொகை செலுத்தாதபோது காப்பீட்டுத் திட்டங்கள் காலாவதியாகி விடும். இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்று காரணமாக, பொதுமக்கள் ஆயுள் காப்பீடுகளை புதுப்பிக்க வசதியாக கடந்த ஆக.31-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.
இணையதள முகவரி
இந்நிலையில், இந்தக் கால அவகாசம் நவ.30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, www.postallifeinsurance.gov.in என்ற இணையதள முகவரியில் காப்பீடு புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளிக்கலாம். அல்லது தபால் நிலையங்களுக்கு நேரில் சென்றும் புதுப்பித்துக் கொள்ளலாம் என அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.