

பொதுமக்களுக்கு வழக்கமாக ஏற்படும் சாதாரண காய்ச்சல் மற்றும் இதர நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக் ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
தமிழகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவக் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் தொடர்பாக முதல்வர்பழனிசாமி தலைமையில் சுகாதாரத் துறையினருடன் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது.
தலைமைச் செயலகத்தில் நடந்தஇக்கூட்டத்தில் துணை முதல்வர்ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலர் கே.சண்முகம் மற்றும் பல்வேறு துறைகளின் செயலர்கள், மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றனர்.
இதில் முதல்வர் பேசியதாவது:
கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு கடந்த 5 மாதங்களில், உயர் அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக நோய் பரவல் கட்டுக்குள் உள்ளது. ஒரு நாளுக்கு சுமார் 85 ஆயிரம் பரிசோதனைகள் வரை மேற்கொண்டதால், வைரஸ் பரவல் குறைக்கப்பட்டுள்ளது.
அதிக அளவில் பரிசோதனைகள் நடத்தப்பட்டு, தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களிலும் சுகாதாரத் துறையால் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
காய்ச்சல் முகாம்கள்
தமிழகம் முழுவதும் காய்ச்சல்முகாம்கள் நடத்தி, ஆயிரக்கணக்கானோர் பரிசோதிக்கப்பட்டு, அறிகுறி தென்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. சென்னையில் மாநகராட்சி அலுவலர்கள் வீடு வீடாக சென்று, காய்ச்சல் மற்றும் வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்ததாலும் நோய் பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது.
தற்போது ஒருசில துறைகள் தவிர்த்து, எல்லாவற்றுக்கும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. முன்பு இ-பாஸ் நடைமுறை இருந்ததால் மக்கள் எங்கு செல்கிறார்கள் என்று தெளிவாக தெரிந்தது. இப்போது தங்குதடையின்றி அனைத்து இடங்களுக்கும் சென்றுவரக்கூடிய சூழல் இருப்பதால், நோய் பரவலை கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, மக்கள் அதிக கவனத்துடன் இருக்கவேண்டும். அனைத்து துறை அதிகாரிகளும் ஒன்றாக இணைந்து பணியாற்றி, நோய் பரவலை குறைக்க வேண்டும்.
தற்போது கரோனா குறித்த சந்தேகம் இருப்பதால், பொதுமக்களுக்கு வழக்கமாக ஏற்படும் சாதாரண காய்ச்சல் மற்றும் இதர நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக் ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
நோய்களுக்கு மருந்து
இதில், மாநகராட்சி, நகராட்சி, பெரிய கிராமங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத இடங்கள் அடங்கும். அங்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், மருந்துகளுடன் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் இடம்பெறுவர். காய்ச்சல், தலைவலி போன்ற சாதாரண நோய்களுக்கு அங்கு மருந்துகள் வழங்கப்படும்.
ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் இறைச்சி, மீன் கடைகளில் மக்கள் ஞாயிற்றுக்கிழமை கூடுவதை தவிர்க்க வேண்டும். சென்னை காசிமேடு பகுதியில் மக்களுக்கு மீன்வளம், காவல், உள்ளாட்சித் துறையினர் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மெரினா கடற்கரையில் மக்கள் கூடாமல் இருப்பதை காவல்துறை உறுதிசெய்ய வேண்டும். அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். முகக் கவசம்அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க காவல், சுகாதாரம், உள்ளாட்சி துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் முடிந்த அளவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களைமுகக் கவசம் அணியச் செய்ய வேண்டும். கரோனா தொற்று ஏற்பட்டு, அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு வருபவர்களை உடனடியாக சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும்.
மழைக் காலம் தொடங்கியுள்ளதால், கரோனாவுடன், டெங்கு வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. காய்ச்சல் என்பது கரோனா அறிகுறியாக உள்ள நிலையில், டெங்குவும் வந்தால் பெரும் பிரச்சினையாகிவிடும். எனவே, உள்ளாட்சித் துறை கவனமாக இருக்க வேண்டும்.
அனைத்து உள்ளாட்சி நிர்வாகங்களும் ஆங்காங்கே தேங்கியிருக்கும் தண்ணீரை அப்புறப்படுத்த வேண்டும்.
தொழிற்சாலைகள் 100 சதவீதம் திறக்கப்பட்டுள்ள நிலையில், தொழிலாளர்களை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்கின்றனரா, அனைவரும் முகக் கவசம் அணிகின்றனரா, சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா, கழிப்பறை சுத்தமாக இருக்கிறதா என்று சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு முதல்வர் கூறினார்.