Published : 09 Sep 2020 08:29 AM
Last Updated : 09 Sep 2020 08:29 AM

சென்னையில் 2021 மே வரை தினமும் 700 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

நீராதாரங்கள் மற்றும் கிருஷ்ணா நீரை கொண்டு சென்னையில் அடுத்த ஆண்டு மே மாதம் வரை தினமும் 700 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொண்டு வரும் கரோனா தொற்று தடுப்பு பணிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், திட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து தலைமைச் செயலகத்தில் உயரதிகாரிகளுடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது அமைச்சர் பேசியதாவது:

சென்னை பெருநகர மாநகராட்சி பகுதியில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பரிசோதனைகளை அதிகரித்தல், காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள், வீடுதோறும் சென்று வைரஸ்தொற்று அறிகுறி உள்ளவர்களைகண்டறிதல், தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளால் வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் பிற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும்ஊரக உள்ளாட்சி அமைப்புகளிலும் நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் காய்ச்சல் முகாம்கள் நடத்துதல், தனிமைப்படுத்தும் மையங்கள் அமைத்தல், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தானியங்கி வாகன நிறுத்தங்கள்

சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால், முக்கிய சாலைகள், பேருந்து தட சாலைகளை மேம்படுத்தும் பணிகளை விரைவாக முடிக்கவேண்டும். சீர்மிகு நகர திட்டத்தின்கீழ், தி.நகர் பாண்டிபஜார் தியாகராயா சாலையில் 1,522 சதுர மீட்டர் பரப்பில் ரூ.40 கோடியே79 லட்சம் மதிப்பில், 500 இருசக்கர வாகனங்கள், 200 நான்குசக்கர வாகனங்கள் நிறுத்த அமைக்கப்பட்டு வரும் பல அடுக்கு தானியங்கி வாகன நிறுத்த பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். இது, முதல்வரின் ஒப்புதலுடன் வரும் அக்டோபர் 2-வது வாரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும்.

சென்னை குடிநீருக்காக தற்போது கூடுதலாக 4 டிஎம்சி கிருஷ்ணா நீரை செப்.14-ம் தேதி முதல் வழங்க ஆந்திர அரசு உறுதி அளித்துள்ளது.

நிலத்தடி நீர்மட்டம்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் தற்போது 4,065 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. இதுதவிர வீராணம் ஏரியில் 1,160.92 மில்லியன் கன அடி நீர் உள்ளது. இதை கணக்கில்கொண்டு கடந்த ஜூன் 7-ம் தேதி முதல் சென்னையில் நாள் ஒன்றுக்கு 700 மில்லியன் லிட்டராக குடிநீர் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

செம்பரம்பாக்கம் உள்ளிட்ட 4 ஏரிகளில் இருந்து கிடைக்கும் நீர், மீஞ்சூர், நெம்மேலி கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், வீராணம், வாரியத்தின் ஆள்துளை கிணறுகள், நிலத்தடி நீர் மற்றும் 4 டிஎம்சி கிருஷ்ணா நீரைக் கொண்டு, சென்னை மாநகருக்கு 700 மில்லியன் லிட்டர் என்ற அளவிலேயே அடுத்த ஆண்டு மே மாதம் வரை தடையின்றி குடிநீர் வழங்கப்படும்.

சென்னை குடிநீர் வாரியம் சார்பில் 150 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பருவமழை காரணமாக சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் ஓர் அடி உயர்ந்துள்ளது.

மேலும், 60 பேரூராட்சிகளில் நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.67 கோடியே 62 லட்சம் மதிப்பில் நடந்துவரும் 114 பணிகளையும் விரைவாக முடிக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் துறை செயலர்கள் ஹன்ஸ்ராஜ் வர்மா, ஹர்மந்தர் சிங், சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x