‘குளோன்’ ரயில் திட்டத்தின் கீழ் காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் பயணிகளுக்காக மாற்று ரயில் இயக்க திட்டம்
குளோன் ரயில் திட்டத்தின்கீழ், முன்பதிவு செய்யப்பட்ட ரயில்களில், காத்திருப்போர் பட்டியலில் அதிக அளவு பயணிகள் இருந்தால், அவர்களுக்கு அதே ரயில் எண் கொண்ட மாற்று ரயில்இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்து உள்ளது.
கரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, ரயில்வே துறை நாடு முழுவதும் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. தற்போது 230 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வரும் 12-ம் தேதி முதல் மேலும் கூடுதலாக 80 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது.
அதே எண்ணில் மாற்று ரயில்
இந்நிலையில், இந்த சிறப்பு ரயில்களில் முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் பயணிகளின் வசதிக்காக, அதே ரயில் எண்ணில் மாற்றுரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்துக்கு, ‘குளோன்’ ரயில் திட்டம் என பெயரிடப்பட்டு உள்ளது.
ஒரு ரயிலில் ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் காத்திருப்போர் பட்டியலில் பயணிகள் இருந்தால், அவர்களின் வசதிக்காக இந்த மாற்று ரயில் இயக்கப்படும். இந்த ரயில் அசல் ரயில் புறப்படும் நேரத்துக்கு முன்பாக இயக்கப்படும்.
இந்த மாற்று ரயில் குறித்த விவரம், அசல் ரயிலில் சார்ட்தயாரிக்கப்பட்ட பிறகு அல்லதுரயில் புறப்படுவதற்கு 4 மணிநேரத்துக்கு முன்பாக பயணிகளுக்குத் தெரிவிக்கப்படும்.
இதுதொடர்பான விவரம் அடுத்த 15 நாட்களுக்குள் வெளியிடப்படும் என ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ் தெரிவித்துள்ளார்.
