

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நிறுவப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நேற்று கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. இதையொட்டி இரு மாவட்டங்களிலும் ஆயிரத் துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் வியாழக்கிழமை அன்று விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், வண்டலூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்து அமைப்புகள் சார்பில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதற்காக காவல்துறையிடம் மொத்தம் 1490 சிலைகள் வைக்க அனுமதிபெறப்பட்டது.
இவற்றில் ஏற்கெனவே 600 சிலைகள் மாமல்லபுரம் கடற்கரையில் கரைக்கப்பட்டு விட்டன.
இந்நிலையில் மீதமுள்ள சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன. பல்வேறு ஊர்களில் இருந்து கொண்டு வரப்பட்ட சிலைகள் எவ்வித இடையூறுமின்றி மாமல்லபுரம் கடற்கரைக்கு அனுப்பி வைக்கப் பட்டன. அதே நேரம் குறை வான அளவில் கோவளம் கடற் கரைக்கும் சிலைகள் கொண்டு செல்லப்பட்டன. இந்த இரு இடங்களைத் தவிர மாவட்டத்தின் மற்ற கடலோரப் பகுதியில் சிலைகளை கரைக்க போலீஸார் தடை விதித்திருந்தனர்.
சிலை கரைக்கும் பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நேற்று மாலை 5 மணி வரை 500 பெரிய விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர். சிலை களை கரைப்பதற்கு முன்னதாக பக்தர்கள் சிலைகளை கடற் கரையில் வைத்து கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்து, பின்னர் கடலுக் குள் எடுத்துச் சென்று கரைத்தனர். இந்த நிகழ்வையொட்டி, மாமல்லபுரம் கடற்கரை யில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு போலீஸார் அனுமதிக்கவில்லை.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்ட காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளில் ஏற்கெனவே 437 விநாயகர் சிலைகள் மேளதாளத்தோடு ஊர்வலமாக கொண்டுச் செல்லப்பட்டு, அனுமதிக்கப்பட்ட கடற்பகுதிகள், ஏரி, ஆறு உள்ளிட்ட 19 நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து, நேற்று பழவேற்காடு கடலிலும் ஆரம்பாக்கம், ஏழுகண் பாலம் அருகே உள்ள ஓடைகளிலும் 500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கிரேன் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட் டன.
சென்னை மாநகர காவல் துறை எல்லைக்குட்பட்ட செங்குன்றம், மாதவரம், ஆவடி, பூந்தமல்லி பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளில் பெரும் பாலானவை சென்னை கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப் பட்டன.
இவைதவிர, திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில், கரைக்கப் படாமல் உள்ள குறைந்த எண்ணிக் கையிலான விநாயகர் சிலைகள் இன்று முதல் 26-ம் தேதிக்குள் கரைக்கப்படும் என காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
முஸ்லிம் மக்கள் வரவேற்பு
மீஞ்சூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கடலில் கரைக்க பழவேற்காடுக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது, மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் மீஞ்சூர் பகுதி முஸ்லிம் மக்கள் விநாயகர் ஊர்வலத்தை வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில், ஊர்வலத்தில் பங்கேற்ற விநாயகர் சிலை அமைப்பாளர்களுக்கு முஸ்லிம் பிரமுகர்கள் பொன்னாடைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதேபோல் கிறிஸ்தவ மக்களும் வரவேற்றனர். இந்த நிகழ்வு மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இருந்ததாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.