

புதுச்சேரியில் விசாரணைக்கு அழைத்து வந்தவர் லாக்கப்பில் மரணம் அடைந்ததையடுத்து எஸ்ஐ உட்பட 5 போலீஸார் இன்று (புதன்கிழமை) சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
புதுச்சேரி அடுத்த வில்லியனூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர் திருட்டு சம்பவம் நடைபெற்று வந்தது.இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக வில்லியனூர் அருகேயுள்ள நடராஜன் நகரை சேர்ந்த ஆவி (எ) முத்துகுமார் (36) என்பவரை கடந்த 4 நாட்களுக்கு முன்பு தனிப்படை போலீஸார் பிடித்து வில்லியனூர் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அவரிடம் விசாரணை நடத்திய பிறகு, காவல்நிலையத்தில் உள்ள லாக்அப்பில் அவரை நேற்று இரவு அடைத்தனர். இந்த நிலையில், போலீஸார் லாக்அப் அறையை பார்த்த போது, தனது கைலியில் தூக்குபோட்டு முத்துகுமரன் தொங்கி கொண்டு இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார் அவரை மீட்டு சிகிச்சைக்காக, கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், முத்துக்குமரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்பு அவரது உடல் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்தவுடன் டிஐஜி கண்ணன் ஜெகதீசன், எஸ்பி பைரவசாமி ஆகியோர் வில்லியனூர் காவல்நிலையத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில் முத்துகுமார் சாலையோரத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக வெகுநேரம் கழித்து, அவரது சகோதரிகளிடம் வில்லியனூர் போலீஸார் தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் முத்துகுமாரின் உறவினர்களும், விடுதலைசிறுத்தைகள் கட்சியினரும் நள்ளிரவில் வில்லியனூர் காவல்நிலையத்திற்கு விரைந்து சென்று, முத்துகுமரன் மரணத்திற்கு போலீஸார் தான் காரணம் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வில்லியனூர் சப்இன்ஸ்பெக்டர் சஜித், உதவி சப்இன்ஸ்பெக்டர் கணேசன், காவலர்கள் அனந்தகிருஷ்ணன், செல்வம், பத்மநாபன் ஆகிய 5 பேரை பணியிடை நீக்கம் செய்து டிஐஜி கண்ணன் ஜெகதீசன் இன்று உத்தரவிட்டார். இச்சம்மவத்தில் தொடர்புடைய இதர போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முத்துக்குமரன் குடும்பத்தினர் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வில்லியனுார் போலீஸார் நிலையத்தை தொடர்ந்து முற்றுகையிட்டுள்ளனர்.