

தமிழக கடலோரப் பகுதிகளில் ஆபரேஷன் ஆம்லா எனும் பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இன்று இரவு 8 மணிவரை நீடிக்கும் 36 மணிநேர பாது காப்பு ஒத்திகையில் இந்திய கடலோரக் காவல் படையினர், தமிழக கடலோர பாதுகாப் புக் குழும காவலர்கள், தமிழக போலீஸார் ஆகியோர் இணைந்து கடலோரப் பகுதிகளில் ஊடுருவும் பயங்கரவாதிகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய கடலோரப் பகுதிகளில் பாது காப்பை உறுதி செய்யும்விதமாக 2009-லிருந்து ஆண்டுக்கு 2 முறை (ஜூன், டிசம்பர் மாதங்களில்) பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதம் இந்த ஒத்திகை நிகழ்ச்சியின்போது கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த டோர்னியர் விமானம் கடலூர் அருகே கடலில் விழுந்து விபத்து ஏற்பட்டதால் ஒத்திகை நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் பாதுகாப்பு ஒத்திகையை நடத்த 2 முறை தேதி அறிவிக்கப்பட்டு சில காரணங்களால் ரத்து செய்யப்பட்டது.
இறுதியாக நேற்று காலை 8 மணிக்கு திட்டமிட்டபடி பாதுகாப்பு ஒத்திகை தொடங் கியது. இதில் இந்திய கடற்படையினர், தமிழக கடலோர பாதுகாப்புக் குழும போலீஸார், 13 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த சட்டம்-ஒழுங்கு போலீஸார், சுங்கத் துறையினர், மீன்வளத் துறையினர், மீனவ கிராமங்களில் தமிழக கடலோரப் பாதுகாப் புக் குழும போலீஸாரால் உருவாக்கப் பட்டுள்ள 591 கிராம விழிப்புணர்வுக் குழுவினர் ஆகியோரும் இணைந்து கடல் வழியாக ஊடுருவும் நபர்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
நாட்டில் இரண்டாவது மிக நீண்ட கடற்கரையைக் கொண்டது தமிழகம். திருவள்ளூரிலிருந்து கன்னியாகுமரி வரை 13 மாவட்டங்கள் கடலோரத்தில் அமைந்துள் ளன. 1,076 கி.மீ. நீளம் கொண்ட இந்த கடலோரத்தில் கல்பாக்கம், கூடங்குளம் ஆகிய இடங்களில் அதிமுக்கியம் வாய்ந்த அணு மின்நிலையங்களும், சென்னை, எண்ணூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி துறைமுகங்களும், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் அமைந்துள்ள எண்ணெய் துரப்பண நிலையங்களும், மாமல்லபுரம், ராமேசுவரம், திருச்செந்தூர், நாகூர், வேளாங்கண்ணி ஆகிய இடங் களில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற ஆலயங்களும் எதிரிகளின் முக்கிய இலக்கு. இதனால் இந்த பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தமிழக கமாண்டோ படை வீரர்கள், இந்திய கடலோர காவல்படை வீரர்கள் சிலருக்கு 2 நாட்கள் சிறப்புப் பயிற்சியளித்து அவர்களிடம் போலி வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் கொடுத்து இந்திய கடற்படையினர், தமிழக கடலோரப் பகுதிகள் வழியாக ஊடுருவச் செய்வார்கள். இப்படி ஊடுருவும் நபர்களை சிகப்புப் படையினர் என்றும், இவர்களை அடையாளம் கண்டுபிடிப்பவர்களை நீலப் படையினர் எனவும் போலீஸார் அழைக்கின்றனர்.
நேற்று காலை 8 மணியிலிருந்து பயிற்சியளிக்கப்பட்ட வீரர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் படகுகள் மற்றும் வேறு சில வாகனங்கள் மூலம் தமிழக கடலோரப் பகுதிகளில் பயங்கரவாதிகளைப்போல் ஊடுருவும் முயற்சியில் ஈடுபட்டனர். இவர்களில் கல்பாக்கம் அணு மின் நிலையம் அருகே ஊடுருவ முயன்ற 4 பேர், எண்ணூர் துறைமுகத்தில் போலி வெடிகுண்டு வைக்க முயற்சித்த 5 பேரும் அடங்குவர்.
கடலூர் மற்றும் நாகப்பட்டினம் பகுதிகளில் ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டவர்களை மீனவர்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். நேற்று இரவு வரை 12 இடங்களில் ஊடுருவும் முயற்சியில் ஈடுபட்ட 57 பேர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.
தமிழக கடலோர பாதுகாப்புக் குழும ஏடிஜிபி சைலேந்திர பாபு தலைமையில் நடைபெறும் இந்த ஒத்திகை இன்று இரவு 8 மணி வரை நீடிக்கும். யாரிடமும் பிடிபடாமல் ஊடுருவிய நபர்களுக்கும், ஊடுருவல்காரர்களை தப்பிக்கவிடாமல் மடக்கிப் பிடித்த போலீஸார் மற்றும் மீனவர்களுக்கும் ரொக்கப் பரிசு சன்மானமாக வழங்கி கவுரவிக்கப்படும் என போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.