Last Updated : 08 Sep, 2020 10:12 PM

 

Published : 08 Sep 2020 10:12 PM
Last Updated : 08 Sep 2020 10:12 PM

மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடா?- எம்.பி. சு.வெங்கடேசன் சரமாரிக் கேள்வி

தமிழகத்தில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 12 மாநகராட்சிகளில் மதுரையும் ஒன்று. இத்திட்டத்தின் கீழ் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை நவீனப்படுத்துதல், வைகை ஆற்றின் இரு கரைகளிலும் சாலைகளை விரிவுபடுத்துதல், தமுக்கம் மைதானத்தில் வணிக வளாகம் கட்டுதல், மீனாட்சியம்மன் கோயில் அருகே பல அடுக்கு வாகன காப்பகம் கட்டுதல் உள்ளிட்ட பல பணிகள் நடந்து வருகின்றன.

இந்தத் திட்டப் பணிகள் முறையாக நடைபெறவில்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் வந்த வண்ணம் இருந்தன.
இந்த நிலையில், மதுரை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் உலகத் தமிழ் சங்க வளாகத்தில், மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மக்களவை உறுப்பினர்கள் தேனி ரவீந்திரநாத் குமார், விருதுநகர் மாணிக்கம் தாகூர், மாவட்ட ஆட்சியர் வினய், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் எம்எல்ஏ மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் ஒவ்வொரு எம்பியும் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் குறித்து கேள்வி கேட்டனர். விருதுநகர் எம்பி-யான மாணிக்கம் தாகூர், மத்திய அரசின் பி.எம்.கிஷான் திட்டத்தின் கீழ் நடந்துள்ள முறைகேடு குறித்து கேள்வி எழுப்பினார்.

அதைத் தொடர்ந்து, மதுரை எம்பி-யான சு.வெங்கடேசன், 'ஸ்மார்ட் சிட்டி' குறித்த சந்தேகங்களைக் கேட்கத் தொடங்கினார். "மதுரை மாவட்டத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் 105 கோடியில் நடைபெறும் பணிகள் குறித்த அறிக்கை 105 பக்கங்களில் இங்கே சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாயில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்த அறிக்கை வெறும் 6 பக்கங்களில் இருக்கிறதே, என்ன காரணம்?" என்று கேள்வி எழுப்பினார். "நாளையே தந்துவிடுகிறோம்" என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறினர். "ஒரு வாரத்தில் முழு அறிக்கையையும் வளர்ச்சிக்குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று அவர் கேட்டுக்கொண்டார்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஆலோசனை குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக் கொண்ட அந்த குழுவில் துணைத் தலைவராக அந்தத் தொகுதி எம்பி-யும், உறுப்பினர்களாக சட்டமன்ற உறுப்பினர்களும் இருப்பார்கள் என்றும் விதியுள்ளது. ஆனால், அதன்படி மதுரையில் ஒரு முறைகூட ஆலோசனைக் குழு கூட்டம் நடத்தப்படவில்லை. இதுகுறித்தும் சு.வெங்கடேசன் எம்பி கேள்வி எழுப்பினார். "சீக்கிரமே அதற்கு ஏற்பாடு செய்கிறோம்" என்று மாவட்ட ஆட்சியரும், மாநகராட்சி ஆணையரும் உறுதியளித்தனர்.

"கடந்த மார்ச் மாதம் நடந்த கூட்டத்தில், பெரியார் பேருந்து நிலைய பணிகளுக்கான திட்ட மதிப்பீடு 159.70 கோடி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இப்போது அது திடீரென 167.40 கோடியாக உயர்ந்துள்ளது ஏன்? இதேபோல 12 வெவ்வேறு திட்டங்களில் மொத்தம் 28 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு உயர்த்தப்பட்டுள்ளது ஏன்? 4 மாதத்தில் எதற்காக திட்ட மதிப்பீடு உயர்ந்தது?" என்றும் வெங்கடேசன் கேள்வி எழுப்பினார். இதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாமல் மாநகராட்சி அலுவலர்கள் திணறினர்.
அதேபோல, மதுரையில் சாதாரண பல்பு பயன்படுத்தியவர்களுக்கு எல்இடி பல்புகளை மாற்றிக் கொடுத்த வகையில் ரூ.21 கோடி ரூபாய் செலவு கணக்கு காட்டப்பட்டிருப்பதைக் கவனித்த எம்பி, "எந்தெந்த வார்டில் எந்தெந்த தெருக்களில் அப்படி எல்இடி பல்புகள் மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளன?" என்கிற முழு விவரத்தையும் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அதேபோல, "பெரியார் பேருந்து நிலையம், பல அடுக்கு வாகன காப்பகம், தமுக்கம் வணிக வளாகம் போன்ற பிரம்மாண்ட கட்டிடங்களுக்காக, தோண்டப்பட்ட மண் எல்லாம் எங்கே கொட்டி வைக்கப்பட்டுள்ளது? ஒவ்வொரு இடத்திலும் சுமார் 10 முதல் 40 மீட்டர் ஆளத்திற்கு மண் எடுக்கப்பட்டிருப்பதால், குறைந்தது 12 ஆயிரம் கியூபிக் மீட்டர் மண் எடுக்கப்பட்டிருக்கும். அவை எங்கே? மாநகராட்சி பத்திரப்படுத்தி வைத்துள்ளதா? அல்லது முறைகேடாக கடத்தப்பட்டுவிட்டதா?" என்றும் கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்விக்கும் மாநகராட்சி அதிகாரிகளிடம் பதில் இல்லை.

வழக்கமாக ஓரிரு மணி நேரம் மட்டுமே நடைபெறும் மாவட்ட வளர்ச்சிக் கூட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு குறித்த சந்தேகங்களால் சுமார் ஆறரை மணி நேரம் நடந்தது. மதியம் 3.15 மணிக்குத் தொடங்கிய கூட்டம், இரவு 9.45 மணி வரையில் நடந்தது. அடுத்த கூட்டம் நடைபெறும் போது இந்தப் பிரச்சினை மீண்டும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x