Published : 08 Sep 2020 08:16 PM
Last Updated : 08 Sep 2020 08:16 PM

தமிழகத்தில் தான் பட்டியலின மக்கள் கல்வி, முன்னேற்றத்துக்கான வாய்பு அதிகம் உள்ளது: முதல்வர் பழனிசாமி பெருமிதம்

சென்னை

நன்றாகப் படிக்கக்கூடிய, பொருளாதார சூழ்நிலை காரணமாக தனியார் கல்லூரிகளில் சேர்ந்து கல்வி பயில முடியாத நிலையில் உள்ள ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மாணவர்களுக்கு உயர்கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க அதிகமான கல்லூரிகளை தமிழக அரசு உருவாக்கிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது என முதல்வர் பேசினார்.

முதல்வர் பழனிசாமி, தலைமைச் செயலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான உயர்நிலை விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் ஆற்றிய உரை:

“எம்.ஜி.ஆர் காலத்திலும் அம்மா காலத்திலும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட அரசு எங்களுடைய அரசு என்பதை யாராலும் மறுக்க முடியாது. இவர்களுக்காக பல்வேறு திட்டங்களை எங்களுடைய அரசு உருவாக்கி பல நன்மைகள் கிடைத்திருக்கின்றன.

ஏற்கனவே, தமிழகத்தையும் மற்ற மாநிலங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது தமிழகம் அபரிமிதமான வளர்ச்சியை எட்டியுள்ளதற்குக் காரணம் எம்.ஜி.ஆரும், அம்மாவும் கடைக்கோடியில் இருக்கின்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் வாழ்வு மலர வேண்டும், அவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான திட்டங்களைக் கொடுத்திருக்கிறார்கள்.

பல ஆண்டு காலமாக மின்சார வசதி இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்த மலை கிராம மக்களுக்கு மின்சார வசதி, சோலார் மின்வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி என ஏராளமான வசதிகள் செய்து கொடுத்து சமுதாயத்தில் அவர்களும் மதிக்கப்படுபவர்களாக, போற்றப்படுபவர்களாக இருப்பதற்குக் காரணம் அம்மாவினுடைய அரசு என்பதை சுட்டிக்காட்ட விழைகிறேன்.

அதுமட்டுமல்லாமல், இந்தியாவிலேயே அரசின் சார்பாக நடத்தப்படுகின்ற கல்லூரிகள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் திகழ்ந்து முதன்மை வகிக்கிறது. நன்றாகப் படிக்கக்கூடிய, பொருளாதார சூழ்நிலை காரணமாக தனியார் கல்லூரிகளில் சேர்ந்து கல்வி பயில முடியாத நிலையில் உள்ள ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மாணவர்களுக்கு உயர்கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க அதிகமான கல்லூரிகளை அம்மா இருந்த காலத்திலும், தற்பொழுது தமிழக அரசும் உருவாக்கிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இதனால், உயர்கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களைப் பொறுத்தவரை, 2010-க்கு முன்பைவிட, 2011-க்குப் பின்பு உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், கிராமங்களிலுள்ள ஆரம்பப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகள் என தரம் உயர்த்தப்பட்டு சாதாரண குடும்பத்தில் பிறந்த ஏழை, எளிய மாணவ, மாணவியர் கல்வி கற்க அதிகமான பள்ளிகளைத் திறந்தது தமிழக அரசுதான்.

கல்வியறிவு கிடைக்கப்பெற்றால் சமுதாயத்தில் அவர்களுக்கென்று ஒரு பிரதிநிதித்துவமும், இடமும் கிடைக்கும். கல்வி என்பது மிக, மிக முக்கியமானது. கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பென்று சொல்வார்கள். அப்படிப்பட்ட கல்வியைக் கொடுப்பது அரசினுடைய கடமை.

அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர், அம்மா ஆகியோரைப்போல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற வேண்டும், அவர்களும் சமுதாயத்தில் மற்றவர்களைப் போல் வாழ வேண்டுமென்ற அடிப்படையில் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

பள்ளிகளில் படிக்கின்ற குழந்தைகளுக்கு விலையில்லா சீருடை, காலணி, சைக்கிள், நோட்டுப் புத்தகங்கள், மடிக்கணினி என ஏராளமானவற்றை கொடுக்கின்ற ஒரே அரசு அம்மாவின் அரசுதான். இது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் எதிர்காலம் சிறக்க அம்மாவின் அரசு எடுத்த நடவடிக்கையாகும். தமிழக அரசால் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகள் நிறைய திறக்கப்பட்டுள்ளன.

மலைவாழ் மக்களுக்கு சிறந்த கல்வி கொடுக்க ஏகலயா உண்டு உறைவிடப் பள்ளிகள் துவக்கியது தமிழக அரசு. பழங்குடியின மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்க கள்ளக்குறிச்சி மாவட்டம், வெள்ளிமலையில் விளையாட்டுத் திறன் மேம்பாட்டு மையம் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது.

அதேபோல், கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைகட்டி, நீலகிரி மாவட்டம் கூடலூர், திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர், சேலம் மாவட்டம் கருமந்துறை, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஆகிய பகுதிகளில் பழங்குடியின மாணவர்களுக்கு 5 தொழில்நுட்ப பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வித் தரம் உயர்த்தப்படவேண்டும், கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை உயர வேண்டுமென்று அம்மாவின் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது”.

இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x