

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலா மையங்கள் அனைத்தும் 5 மாதங்களுக்கு மேலாக வெறிச்சோடிய நிலையில், அவை அனைத்தையும் இந்த மாத இறுதிக்குள் திறப்பதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன.
கரோனா பாதிப்பால் அனைத்துப் பகுதி மக்களும் பாதிக்கப்பட்டதைப் போன்று கன்னியாகுமரி மாவட்டமும் பெரும் பாதிப்பிற்குள்ளானது. தற்போது ஊரடங்கு தளர்விற்கு பின்னர் ஓரளவு இயல்பு நிலை திரும்பி வருகிறது. கரோனா தொற்றும் குறைந்து வருகிறது. இந்நிலையில் உள்ளூர், வெளி மாவட்ட அரசுப் பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. காய்கறி, மீன் சந்தை, அத்தியாவசியப் பொருள் விற்பனையகம் என அனைத்து வர்த்தகப் பகுதிகளும் திறந்து மக்கள் சமூக இடைவெளியுடன் வாழப் பழகியுள்ளனர்.
நாகர்கோவில் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள பூங்காக்கள் திறக்கப்பட்டு மக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சர்வதேசச் சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி, மார்ச் மாதத்தில் இருந்தே ஊரடங்கால் வெறிச்சோடிக் காணப்பட்டது. தற்போது பேருந்துகள் இயங்குவதால் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு வந்து கடல் அழகை ரசித்துச் செல்கின்றனர். அதேநேரம் விவேகானந்தர் பாறைக்குப் படகு பயணம் மற்றும் காந்தி மண்டபம் உட்பட பிற சுற்றுலா மையங்களையும், சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் போன்ற கன்னியாகுமரியின் இயற்கை எழில்கொஞ்சும் காட்சிகளைப் பார்வையிட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
இதே நிலை தான் குமரி குற்றாலம் என்றழைக்கப்படும் திற்பரப்பு நீர்வீழ்ச்சியிலும் உள்ளது. கடந்த சில நாட்களாகப் பெய்த மழையால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அதே நேரம் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லாமல் வெறிச்சோடிக் காணப்படுகிறது. மேலும் பத்மநாபபுரம் அரண்மனை, உதயகிரி கோட்டை, வட்டக்கோட்டை, மாத்தூர் தொட்டிப்பாலம் மற்றும் கன்னியாகுமரியில் உள்ள பிற சுற்றுலா மையங்களும் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக சுற்றுலாப் பயணிகளின்றி வெறுமனே காட்சியளிக்கின்றன. இதனால் சுற்றுலா மையங்கள் மூலம் வாழ்வாதாரம் பெற்ற ஆயிரக்கணக்கானோர் வருவாய் இழந்து தவிக்கின்றனர்.
தற்போது ஊரடங்கு தளர்வுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் கட்டுப்பாடுகளுடன் கன்னியாகுமரி சுற்றுலா மையங்களைத் திறப்பதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது. இதுகுறித்துச் சுற்றுலாத் துறையினர் கூறுகையில், ''உதகை, கொடைக்கானல் போன்ற சுற்றுலா மையங்களைத் திறந்து மக்களை அனுமதிப்பதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. இதைப் போலவே கன்னியாகுமரி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள சுற்றுலா மையங்களை இந்த மாத இறுதிக்குள் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன'' என்றனர்.