

மணல் கடத்தலைத் தடுப்பது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை அதிகாரிகள் மதிப்பதில்லை என உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
நெல்லை கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த சிவசங்கரன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
''கல்லிடைக்குறிச்சியில் அதிகளவில் விவசாயம் நடைபெறுகிறது. இப்பகுதியில் ஓடை தடுப்பணை உள்ளது. இங்கு கேரளாவைச் சேர்ந்த மனுவே ல்ஜார்ஜ் எம்.சாண்ட் குவாரி அமைக்க உரிமம் பெற்றுள்ளார். கடினமான பாறைகளை உடைத்து எம்.சாண்ட் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த நபரோ அதிகாரிகள், அரசியல்வாதிகள் துணையுடன் சட்டவிரோதமாக மணல் எடுத்து விற்பனை செய்து வருகிறார். தினமும் இரவில் 200 முதல் 300 லாரிகளில் மணல் எடுத்து விற்பனை செய்யப்படுகிறது.
இதனால், இப்பகுதியில் நீர் ஆதாரம் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. எனவே, கல்லிடைக்குறிச்சியில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்கவும், மணல் அள்ளுவதைத் தடுக்கவும், துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்''.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள், ''மணல் கடத்தலைத் தடுக்க நீதிமன்றம் எத்தனை உத்தரவுகள் பிறப்பித்தாலும், அதனை அரசு அதிகாரிகள் மதிப்பதில்லை. வருவாய்த்துறை, காவல்துறையினருக்கு தெரியாமல் மணல் கடத்தல் நடைபெற வாய்ப்பில்லை'' என்றனர்.
பின்னர் இந்த மனு தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் காணொலி வாயிலாக ஆஜராகி விளக்கம் அளிக்கவும், மணல் கடத்தலைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மனுத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு விசாரணையை செப். 24-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.