

எவ்வளவு செலவானாலும், எவ்வளவு நிதிச்சுமை ஏற்பட்டாலும் பரவாயில்லை, மனிதனுடைய உயிரைக் காப்பாற்றுவது அரசினுடைய கடமை என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (செப். 8), தலைமைச் செயலகத்தில், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவக் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
"கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு ஏறக்குறைய 5 மாத காலத்தில், உயரதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக இந்நோய்ப் பரவல் கட்டுக்குள் உள்ளது. இந்நோய்ப் பரவல் படிப்படியாக தமிழகத்தில் குறையத் தொடங்கியுள்ளது.
நாளொன்றுக்கு சுமார் 85 ஆயிரம் வரை பரிசோதனை மேற்கொண்டதன் விளைவாக கரோனா வைரஸ் தொற்று பரவல் குறைக்கப்பட்டிருக்கிறது. நோய்த் தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கிறோம்.
சென்னையைப் பொறுத்தவரை கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மூலம், தற்போது குறையத் தொடங்கி, ஆயிரத்திற்கும் கீழுள்ளது. அதுமட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்தி, அதில் ஆயிரக்கணக்கானோர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அறிகுறி தென்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்த காரணத்தாலும், சென்னையைப் பொறுத்தவரை, மாநகராட்சி அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் மற்றும் வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்த காரணத்தாலும் இந்நோய்ப் பரவல் தமிழகத்தில் படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது.
தற்போது தங்குதடையில்லாமல் அனைத்து இடங்களுக்கும் சென்று வரக்கூடிய சூழ்நிலை இருப்பதால், பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். தற்போது மக்கள் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று வருகிற காரணத்தால், இந்நோய்ப் பரவலை கண்டுபிடிக்க முடியாத ஒரு சூழ்நிலை இருப்பதால் அனைத்துத் துறை அதிகாரிகளும் ஒன்றாக இணைந்து பணியாற்றி, கவனமாக இருந்து இந்த நோய்ப் பரவல் மேலும் பரவாமல், படிப்படியாக குறையக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மேலும் தொடர்ந்து இருக்க வேண்டும், அங்குள்ளவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அவ்வாறு கண்காணிக்கத் தவறினால் மற்றவர்களுக்கு நோய்த் தொற்று பரவக்கூடிய சூழ்நிலை உள்ளதால், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
தற்போது, கரோனா தொற்று குறித்த ஐயப்பாடு இருக்கின்ற நிலையில், சாதாரண காய்ச்சல் மற்றும் மற்ற நோய்களுக்கு சிகிச்சை பெற முடியாத சூழ்நிலை இருக்கிற காரணத்தால் பொதுமக்களுக்கு அன்றாடம் ஏற்படும் நோயை குணப்படுத்த, தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளீனிக் (Mini Clinic) ஏற்படுத்த அரசால் திட்டமிடப்பட்டுள்ளது. இதில், மாநகராட்சி, நகராட்சி, பெரிய கிராமங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத இடங்கள் அடங்கும்.
இந்த மினி கிளீனிக்கில் தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளுடன் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் இடம்பெறுவர். காய்ச்சல், தலைவலி போன்ற எளிதாக சிகிச்சை அளிக்கக்கூடிய நோய்களுக்கு அந்த மினி கிளீனிக்கில் மருந்துகள் வழங்கப்படும்.
ஊரடங்கு தளர்த்தப்பட்ட காரணத்தால், இறைச்சிக் கடைக்கும், மீன் கடைக்கும் மக்கள் கூட்டம், கூட்டமாக செல்கின்றார்கள், அதைத் தவிர்க்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை காசிமேடு பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் முகக்கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியை பின்பற்றாமலும் ஒரே இடத்தில் கூடுகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மீன்வளத் துறை, காவல் துறை, உள்ளாட்சித் துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள், மக்களுக்குத் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுக்க வேண்டும்.
மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மெரினா கடற்கரையில் மக்கள் கூடாமல் இருப்பதை காவல் துறை உறுதி செய்ய வேண்டும். மேலும், மெரினா கடற்கரையில் கடைகளில் உள்ளவர்களுக்குக் கரோனா நோய்த் தொற்று இருந்தால், அவர்களிடம் வாங்குபவர்களுக்கும் கரோனா நோய்த் தொற்று வருவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, அங்கே கூட்டம் கூடாமல் இருப்பதற்கு காவல் துறை தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இப்பொழுது மழைக் காலம் தொடங்கிவிட்டதால், கரோனா நோய்த் தொற்று மட்டுமல்ல, டெங்கு வருவதற்கும் வாய்ப்பிருக்கின்றது. இப்பொழுது பல இடங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. மாநகரம், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, நகராட்சி பகுதிகளில் ஆங்காங்கே தேங்கியிருக்கும் தண்ணீரை அப்புறப்படுத்த வேண்டும். தண்ணீர் எங்கும் தேங்காமல் பார்த்துக் கொண்டால் தான் டெங்கு கொசு ஏற்படாமல் இருக்கும்.
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் காலிப் பணியிடங்கள் முழுவதும் நிரப்பப்படும், ஏனென்றால், தமிழகத்தை பொறுத்தவரை ஒரு உயிர் கூட இழப்பதற்கு அரசு அனுமதிக்காது, ஒவ்வொரு உயிரும் அரசுக்கு முக்கியம். அதனடிப்படையில் இன்று வரை நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். எவ்வளவு செலவானாலும், எவ்வளவு நிதிச்சுமை ஏற்பட்டாலும் பரவாயில்லை, மனிதனுடைய உயிரைக் காப்பாற்றுவது அரசினுடைய கடமை.
அரசாங்கம் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், பொதுமக்களுடைய ஒத்துழைப்பு இல்லாமல், கரோனா நோய் பரவலைத் தடுக்க முடியாது. அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளை முழுமையாக பொதுமக்கள் பின்பற்றினால் தான் இந்த நோய்ப் பரவலைத் தடுக்க முடியும்.
மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில், இறப்பு சதவீதம் குறைக்கப்பட்டிருக்கிறது, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது"
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.