

கரோனா நிவாரண நிதியை தகுதியுள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று சிஐடியு வலியுறுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக திருச்சியில் இன்று (செப். 8) சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
"முறைசாரா நல வாரியங்களில் நேரடி பதிவை தொடங்க வேண்டும். புதுப்பித்தல் மற்றும் பணப் பயன்களுக்கான விண்ணப்பங்களுக்கு டிசம்பர் மாதம் வரை கால அவகாசம் வழங்க வேண்டும். ஆன்லைன் பதிவு அறிவிப்புக்கு முன்னதாக உள்ள பதிவு விண்ணப்பங்களை நேரடியாக பெற்று அட்டை வழங்க வேண்டும். மத்திய தொழிற்சங்கங்களுக்கு லாகின் ஐடி (login ID) வழங்க வேண்டும். மாவட்ட கண்காணிப்புக் குழுக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்" என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
மன்னார்புரத்தில் உள்ள தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாநகர் மாவட்ட துணைத் தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார்.
சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரங்கராஜன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். சிஐடியு மாவட்டப் பொருளாளர் ராஜேந்திரன், புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜ், மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம், பொருளாளர் சம்பத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.