Published : 08 Sep 2020 04:47 PM
Last Updated : 08 Sep 2020 04:47 PM

அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்ற முடிவை ரத்து செய்யக்கோரிய வழக்கு: தமிழக அரசு, யுஜிசி, ஏஐசிடிஇ பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்ற தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக்கோரிய வழக்குகளில் தமிழக அரசு, யுஜிசி, ஏஐசிடிஇ ஆகியவை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கலை - அறிவியல், பொறியியல், எம்.சி.ஏ. படிப்புகளுக்கான அரியர் மாணவர்களையும் தேர்ச்சி என அறிவித்த தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக்கோரி தூத்துக்குடியை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். அதேபோல அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமியும் தமிழக அரசின் முடிவை ரத்து செய்ய கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவர்களது மனுவில், கல்வியின் தரம், மாணவர்களின் எதிர்காலம், பல்கலைக்கழகங்களின் மாண்பு ஆகியவற்றை காப்பதற்காக வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், அரசின் அறிவிப்பால் அனைத்து பாடங்களிலும் படித்து தேர்ச்சியடைந்த மாணவர்களை அரசின் அறிவிப்பு சோர்வடைய செய்யும் என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் தரத்தை தாழ்த்தும் வகையில் அரசின் முடிவு உள்ளதாகவும், 25% மதிப்பெண்ணுக்குக் கீழ்வாங்கி தோல்வி அடைந்தவர்களும், 25 பாடங்களுக்கு மேல் அரியர் வைத்தவர்களும் ஒரே நேரத்தில் தேர்ச்சி பெற வைப்பதால் கல்வியின் தரம் மேலும் குறையும் நிலை உருவாகி உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

தேர்வுகளில் பங்கேற்றால் தான் மாணவர்களுக்கு நம்பிக்கையும், மன திருப்தியும் கிடைப்பதுடன் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலான மாணவர்களுடன் போட்டியிடக்கூடிய திறன், செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவை அவர்களிடம் பிரதிபலிக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்வு நடைமுறை குறித்த முடிவுகளை எடுக்க சிண்டிகேட், செனட், அகாடமிக் கவுன்சில் ஆகியவை உள்ள நிலையில், தேர்வு நடைமுறைகளில் அரசு தலையிட்டு அரியர் மாணவர்களையும் தேர்ச்சி அடைய செய்தது தவறு என குறிப்பிட்டுள்ளார்.

அரசின் முடிவை கைவிடக்கோரி மனு அளித்தும் பலனில்லாததால், உடனடியாக அரசின் முடிவுக்குத் தடை விதிக்க வேண்டுமென்றும், அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

வழக்கறிஞர் ராம்குமார் தொடர்ந்த வழக்கு இன்று (செப். 8) நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தரப்பில் இதே கோரிக்கையுடன் வழக்கை தாக்கல் செய்திருப்பதாகவும், அதனையும் இந்த வழக்குடன் இணைத்து விசாரிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதிகள் இரு வழக்குகளையும் இணைத்து விசாரித்தனர்.

அப்போது மனுதாரர் பாலகுருசாமி தரப்பில் வழக்கறிஞர் விஜய் ஆனந்த் ஆஜராகி, அரியர் தேர்வுகளை ரத்து செய்ய பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும், தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் வாதிட்டார். யுஜிசி உத்தரவுக்கு முரணாக தமிழக அரசு முடிவெடுத்து உள்ளதாகவும், ஏஐசிடிஇ-யும் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் ஆஜராகி, பேரிடர் மேலாண்மை சட்ட விதிகளின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், இறுதி பருவ தேர்வு மாணவர்களைத்தான் தேர்வில்லாமல் தேர்ச்சி பெற செய்யக்கூடாது என அறிவித்துள்ளதாகவும், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் அடிப்படையில்தான் பிற மாணவர்களை தேர்ச்சி பெற செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இரு வழக்குகள் குறித்தும் தமிழக அரசு, பல்கலைக்கழக மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் ஆகியவை இரண்டு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x