10 ஆண்டு பணப்பலன்களை வழங்கக்கோரி நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு கட்டுமானத் தொழிலாளர்கள் போராட்டம்

10 ஆண்டு பணப்பலன்களை வழங்கக்கோரி நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு கட்டுமானத் தொழிலாளர்கள் போராட்டம்
Updated on
1 min read

கட்டிடத் தொழிலாளர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்க வேண்டிய பணப்பலன்களை உடனடியாக வழங்கக்கோரி நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று கட்டுமானத் தொழிலாளர்கள் போராட்டம் நடந்தினர்.

நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் கல்வி நிதி, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்து மரணம், திருமண உதவி உள்ளிட்ட பணப்பயன்கள் கேட்டு விண்ணப்பித்து இதுவரை நல உதவிகள் கிடைக்காத நூற்றுக்கணக்கான தொழிலாளர் கேட்பு மனுக்களுக்குப் பண பயன் வழங்காமல் அலுவலகத்தில் தேக்கி வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக விபத்து மரண நிதி கேட்டு விண்ணப்பித்து 10 ஆண்டுகளாகவும், இயற்கை மரண நிதி கேட்டு விண்ணப்பித்து 6 ஆண்டுகளாகவும், ஓய்வூதியம் பெற்று வந்த தொழிலாளி இறந்தபின் வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம், 60 வயது முடிந்து ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்த தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், திருமண உதவி மற்றும் கல்வி உதவித்தொகைக்கான கேட்பு மனுக்கள் உட்பட நூற்றுக்கணக்கான பயனாளிகளுக்கு பணபயன் வழங்காமல் வைத்துள்ளனர்., பணபயன்கள் கிடைக்காமலும் பல கஷ்டங்களையும், துன்பங்களையும் தொழிலாளர்கள் அனுபவித்து வருகின்றனர்.

எனவே நிலுவை மனுக்களுக்குப் பணபயன் வழங்கக் கேட்டும், இதுவரை நிவாரணம் கிடைக்காத தொழிலாளர்களுக்குக் கரோனா நிவாரணத் தொகை வழங்கக் கேட்டும், புதிய பதிவு, புதுப்பித்தல், கேட்பு மனுக்களை நேரடியாக அல்லது மத்திய சங்கம் வழியாக வாங்குவதைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட கட்டுமானத் தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கே.செல்லப்பன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் தங்கமோகன், மாவட்டத் தலைவர் சிங்காரன், கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பெருமாள், கட்டுமான தொழிலாளர் சங்க நிர்வாகிகள், சிஐடியு நிர்வாகிகள் உட்பட கட்டுமானத் தொழிலாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in