

விருத்தாசலத்தை அடுத்த பெரியநெசலூர் அருகே காரும் மீன் ஏற்றிச் சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த நைனார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வேலுசாமி மற்றும் அவரது உறவினர்கள் குடும்பத்தோடு, குழந்தைக்கு மொட்டையடித்து காதணி விழா நடத்த விருத்தாச்சலம் மணவாளநல்லூரில் உள்ள கொளஞ்சியப்பர் கோயிலுக்குக் காரில் இன்று (செப். 8) சென்றுள்ளனர்.
கடலூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பெரியநெசலூர் கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது, இளைஞர் ஒருவர் சாலையில் குறுக்கிட்டதால், காரை நிறுத்த முயற்சித்தபோது, எதிர் திசையில், பரங்கிப்பேட்டையிலிருந்து மீன்களை ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கி அதிவேகமாக சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானதில் கார் பலத்த சேதமடைந்தது. மீன் லாரியும் தலைக்குப்புற கவிழ்ந்துள்ளது. இதனால் விருத்தாசலம்-சேலம் சாலையில் போக்குவரத்துத் தடைபட்டது.
இதில் காரில் பயணித்த வேலுச்சாமி மனைவி ரேவதி, அவருடைய மகள்கள் பவானி, பரிமளா, மற்றும் மீன் ஏற்றிச் சென்ற லாரியின் கிளீனர் லோகநாதன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த தேவானந்த், அறிவரசன், பிரத்விசாய், ரேணுகாதேவி, மணிமேகலை ஆகியோர் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதில் தேவானந்த் என்பவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், இறந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், சாலையில் கவிழ்ந்து கிடந்த லாரியையும், காரையும் கிரேன் உதவியோடு அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்படுத்தினர். விபத்து நிகழ்ந்த இடத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் பார்வையிட்டார்.
இதனிடையே மீன் லாரி கவிழ்ந்ததில் லாரியில் இருந்த மீன்கள் சாலையில் சிதறிக் கிடந்தது. இதை அப்பகுதி மக்கள் பாத்திரங்களைக் கொண்டு வந்து அள்ளிச்சென்ற நிகழ்வும் நிகழ்ந்தது.
அதிவேகமாக செல்லும் மீன் லாரிகள்
கடலூர், சிதம்பரம் பகுதியில் பிடிக்கப்படும் மீன்களுக்கு கேரளாவில் நல்ல விலை போகும் என்பதால், தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் கடலூர், சிதம்பரம் பகுதியிலிருந்து மீன்கள் கேரளாவுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுவது வழக்கம். அவற்றை ஏற்றிச் செல்லும் லாரிகள் 8 மணி நேரத்திற்குள் திருவனந்தபுரத்தை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் கடலூர்-சேலம் சாலையில் அதிவேகமாக செல்லும். இதனால் பலமுறை விபத்துக்கள் நடைபெற்றதுண்டு.
ஏற்கெனவே ஒருமுறை காவல்துறை வாகனத்தின் மீதும் இதேபோன்று மீன் ஏற்றிச் சென்ற லாரி மோதி, காவல் உதவி ஆய்வாளர் கை எலும்பு முறிந்த நிகழ்வும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
தற்போது தமிழக சாலைகளில் இருசக்கர வாகனங்களின் பயன்பாடு அதிகரித்திருப்பதாகவும், நீண்டதூரம் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் கவனத்துடன் பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தியிருக்கும் நிலையில், சரக்கு வாகனங்களுக்கு யார் கட்டுப்பாடு விதிப்பது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.