

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு வரும் 11-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சயான், மனோஜ், உதயன், மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி, ஜம்சீர் அலி, தீபு, சதீசன் மற்றும் சந்தோஷ்சமி ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கின் விசாரணை உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று (செப். 9) விசாரணைக்கு வந்தது.
விசாரணைக்கு சயான், மனோஜ், உதயன், மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி, ஜம்சீர் அலி ஆகிய ஏழு பேர் ஆஜராகினர்.
விசாரணை தொடங்கியதும் அரசு வழக்கறிஞர் பால நந்தகுமார், "தீபு, சதீசன் மற்றும் சந்தோஷ்சமி ஆகிய மூவரும், தங்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்டை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். எனவே, அவர்களின் பிடி ஆணையை திரும்ப பெறலாம்" என நீதிபதி பி.வடமலையிடம் தெரிவித்தார்.
நீதிபதி பி.வடமலை, அவர்கள் மூவரின் பிடி ஆணையை திரும்ப பெற்று, வழக்கை வரும் 11-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
சயான், மனோஜ், உதயன், மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 10 பேரும் ஆஜரானதும், தினமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.