Published : 08 Sep 2020 03:11 PM
Last Updated : 08 Sep 2020 03:11 PM

பிரதமர் கிசான் திட்டத்தில் பயன்பெறுபவர்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்; செந்தில்பாலாஜி கோரிக்கை

பிரதமர் கிசான் திட்டத்தில் பயன்பெறுபவர்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என, திமுக மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், ஆன்லைன் தேர்வை முறைப்படுத்தக் கோரியும் கரூர் மாவட்ட திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் கரூர் கலைஞர் அறிவாலயம் முன் மாவட்ட பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்எல்ஏவுமான வி.செந்தில்பாலாஜி தலைமையில் இன்று (செப். 8) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் மத்திய நகரப்பொறுப்பாளர் எஸ்.பி.கனகராஜ் கருப்புக்கொடி ஏந்தியும் மற்றும் நீட் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் கோரிக்கை அட்டைகளை ஏந்தியும் பங்கேற்றனர்.

செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், "நீட் தேர்வை அனுமதிக்கக்கூடாது என தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் குரல் கொடுத்து வருகிறார். கரோனா காலத்திலும் வலுக்கட்டாயமாக நீட் திணிக்கப்படுகிறது. நீட், ஆன்லைன் வகுப்புகளை புகுத்தும் மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து கரூர் மாவட்டத்தில் இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் 1,000 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க ஏழை மாணவ, மாணவிகள் செல்போன் வாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். அதற்கு இணைய வசதிக்கு பணம் வேண்டும். கிராமப்பகுதிகளில் இணைய வசதி கிடைப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. மக்கள் மற்றும் மாணவர்கள் மீது அக்கறை காட்டாத அரசாக இந்த அரசு உள்ளது.

பிரதமர் கிசான் திட்டத்தில் ரூ.450 கோடி ஊழல், முறைகேடு நடந்துள்ளது. சிபிஐ விசாரணை வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கோரியுள்ளார். கரூர் மாவட்டத்தில் 80 ஆயிரம் விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெறுகின்றனர். இத்திட்டத்தில் ஒவ்வொரு முறை ரூ.2,000 பணம் ஏற்றும்போதும் ரூ.500 லஞ்சமாக கேட்கப்படுகிறது. இப்படி பெறும் லஞ்சம் அனைத்து தரப்புக்கும் சென்றடைகிறது.

கரூர் மாவட்டத்தில் எத்தனை பேர் இத்திட்டத்தில் விண்ணப்பித்தனர், எத்தனை பேர் இத்திட்டத்தில் பயன்பெறுகின்றனர் என மாவட்ட ஆட்சியர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இந்த அரசில் ஊழல் மட்டும் தான் நடைபெறுகிறது. செப். 9-ம் தேதி மாவட்ட பொதுக்குழு அரங்கம், அறைகள் முன்பதிவு செய்திருந்தோம். ஆனால், ஆளும் தரப்பு அனுமதிக்கக் கூடாது என, அவர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளது.

கரோனா பரிசோதனை செய்துகொண்டாலே அரசு, தனியார் மருத்துவமனைகளில் அட்மிஷன் ஆக வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். அரசு மருத்துவவனையில் போதுமான மருத்துவர்களோ, வசதிகளோ இல்லை. இறப்பு குறித்து உண்மையான விபரங்களை தெரிவிக்க மறுக்கின்றனர்.

வெங்கமேடு எம்ஜிஆர் சிலை அருகே விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை விற்பனை செய்து வந்தனர். ஆளுங்கட்சி தலையீட்டால் அவர்கள் கடை போட அனுமதி மறுத்துவிட்டனர். நகராட்சியும் அவர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x