Published : 08 Sep 2020 02:39 PM
Last Updated : 08 Sep 2020 02:39 PM

காங்கிரஸ் மாவட்ட தலைவரை கன்னத்தில் அறைந்த மதுரவாயல் உதவி ஆணையர்: மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சென்னை

நடைப்பாதை கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் நிர்வாகியை, கன்னத்தில் அறைந்த விவகாரம் குறித்து சென்னை மேற்கு மண்டல காவல் இணை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அரும்பாக்கம் திருவீதியம்மன் கோவில் அருகே நடைப்பாதையில் கடைகள் அமைத்திருப்பதால் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை இருப்பதாக கூறப்படுகிறது.

சென்னை அரும்பாக்கம் திருவீதி அம்மன் கோவில் தெரு முதல் டாட்டா மோட்டார்ஸ் எதிரே உள்ள பகுதி வரையும் அதேபோல் டாட்டா மோட்டார்ஸ் அருகில் இருந்து அரும்பாக்கம் பேருந்து நிலையம் வரையும் மழைநீர் கால்வாய் அமைக்க பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள இருபுறமும் கால்வாய் அமைக்கும் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்து வந்தது.

செப்.6 அன்று காலை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடந்து கொண்டிருந்தது. மதுரவாயல் உதவி கமிஷனர் ஜெயராமன் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர் அப்போது காங்கிரஸ் கட்சி மேற்கு மாவட்ட தலைவர் வீரபாண்டியன் அங்கு வந்து கரோனா காலத்தில் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இதுபோன்ற நடவடிக்கை வேண்டாம் அவகாசம் கொடுங்கள் என்று கூறி ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூடாது என்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

கோயம்பேடு உதவி ஆணையாளர் ஜெயராமன் தலைமையிலான போலீசார் வீரபாண்டியனுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் எதிர்ப்பு தெரிவித்து வீரபாண்டியன் உள்பட 4 பேர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் மறியலை கைவிடச்சொல்லியும் கைவிடாததால் உதவி ஆணையர் ஜெயராமன் தலைமையிலான போலீசார் 4 பேரையும் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் வீரபாண்டியன் கன்னத்தில் உதவி ஆணையர் ஜெயராமன் கன்னத்தில் அறைந்து சட்டைக் காலரைப்பிடித்து குற்றவாளியைப்போல் இழுத்துச் சென்றதாக கூறி காங்கிரஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் கட்சியினர் 25-க்கும் மேற்பட்டோர் சிஎம்பிடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காவல் நிலையத்தில் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் பிறகு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வீரபாண்டியன் உட்பட 4 பேரை விடுவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்த செய்தி தினசரி செய்தித்தாள்களில், ஊடகங்கலில் வெளியானது. காங்கிரஸ் மாவட்டத்தலைவர் கன்னத்தில் உதவி ஆணையர் ஜெயராமன் அறைந்த விவகாரத்தை தின்சரி செய்தித்தாளில் வந்த செய்தி அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு (SUO-MOTU) செய்தது.

வழக்கை விசாரித்த ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், வழக்கு தொடர்பாக 2 வாரத்தில் சென்னை சட்டம் ஒழுங்கு (மேற்கு) காவல் இணை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x