

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் செப்டம்பர் 14-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று காரணமாக உலகமே முடங்கியுள்ள நிலையில், தமிழகத்திலும் மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல பணிகள் ஸ்தம்பித்துள்ளன. அரசு கரோனா தொற்றுக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஆனாலும், கரோனாவின் தாக்கம் தமிழகத்தில் குறையவில்லை.
கரோனா தாக்கம் அதிகரித்துள்ள மாநிலங்களில் 3-ம் இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களில் 17 சதவீதத்திலிருந்து 20 சதவீத உறுப்பினர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் கரோனா தொற்றால் உயிரிழந்தார். 5-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் செப்டம்பர் மாதத்தில் கட்டாயம் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்த வேண்டிய நிலையில் தமிழக அரசு உள்ளது. தற்போதுள்ள சட்டப்பேரவைக் கட்டிடம் பழமையான ஒன்று. உறுப்பினர்கள் போதிய இடைவெளியுடன் அமர முடியாத வகையில் உள்ளதாக கருதப்பட்டு வேறு இடத்தில் நடத்த முடிவெடுக்கப்பட்டது.
சட்டப்பேரவை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றால் அங்கு 234 உறுப்பினர்கள் அமர்வது மட்டுமல்ல 256 துறைகளின் செயலர்கள், அதன் ஊழியர்கள் என ஆயிரக்கணக்கில் பலர் இயங்க வேண்டும். கோப்புகளை எடுத்து வரவேண்டும், பத்திரிகையாளர்கள், உயர் அதிகாரிகள், காவலர்கள் என நூற்றுக்கணக்கில் ஒரே இடத்தில் குவியும் நிலை ஏற்படும். வாகனங்கள் நிறுத்த இடம் வேண்டும்.
இதுபோன்ற பல பிரச்சினைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கானோர் அமரும் வசதி கலைவாணர் அரங்கில் உள்ளதால் அங்கு நடத்த முடிவெடுக்கப்பட்டு சட்டப்பேரவைக் கூட்டம் வரும் செப்.14-ம் தேதி கூட்டத்தொடர் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை அலுவல் ஆய்வுக்குழு கூடி எத்தனை நாட்கள் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது, இதில் சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சி சார்பில் துரைமுருகன் கலந்துக்கொண்டார். இந்தக்கூட்டத்தில் கூட்டத்தை 3 நாட்கள் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
செப்.14,15,16 தேதிகளில் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரச்சினைகளைப் பேச 7 நாட்கள் நடத்த வேண்டும் என திமுக சார்பில் கேட்டும் 3 நாட்கள் மட்டுமே நடத்த முடிவெடுத்துள்ளது குறித்து எதிர்க்கட்சித்துணைத்தலைவர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.
கூட்டத்துக்கு வரும் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்டாயம் கரோனா நெகட்டிவ் என சான்றிதழ் பெற்று வரவேண்டும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.