Published : 08 Sep 2020 11:50 AM
Last Updated : 08 Sep 2020 11:50 AM

அலைமோதும் பயணிகள் கூட்டம்: பேருந்துகள் முழு அளவில் இயக்கப்படுமா?

திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு நேற்று மாலை இயக்கப்பட்ட அரசு விரைவு பேருந்தில் பயணிகளின் உடல் வெப்பநிலையை பரிசோதித்த பேருந்து ஊழியர். படங்கள்: த.அசோக் குமார் , மு.லெட்சுமி அருண்

தென்காசி/ திருநெல்வேலி/ தூத்துக்குடி/ நாகர்கோவில்

மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து நேற்று தொடங்கிய நிலையில், பல்வேறு வழித்தடங்களில் கூட்டம் அலைமோதியது. பேருந்துகளை முழு அளவில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டபோது, பேருந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த 1-ம் தேதி முதல் மாவட்டங்களுக்குள் 32 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டன. வெளி மாவட்டங்களுக்கு வேலைக்குச் செல்வோருக்கு இதனால் எந்த பயனும் ஏற்படவில்லை.

எனவே, வெளி மாவட்டங்களுக்கும் பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, நேற்று முதல் மாவட்டங்களுக்கு இடையே அரசுப் பேருந்துகளும், அரசு விரைவுப் பேருந்துகளும் இயங்கத் தொடங்கின.

அனைத்து வழித்தடங்களிலும் பேருந்துகளில் பயணிப்போர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஆனால், 60 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் பல்வேறு வழித்தடங்களில் பேருந்துகளில் நேற்று கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

தென்காசி-திருநெல்வேலி வழித்தடத்தில் இயக்கப்பட்ட பேருந்துகளில் இருக்கைகள் அனைத்தும் தென்காசியிலேயே நிரம்பி, பயணிகள் நின்றுகொண்டு பயணம் செய்தனர். தனிமனித இடைவெளி கேள்விக்குறியானது.

இதுகுறித்து பயணிகள் கூறும்போது, “தென்காசி- திருநெல்வேலி வழித்தடத்தில் 10 நிமிடத்துக்கு ஒரு பேருந்து வந்தாலும், கூட்டம் அதிகமாகவே இருக்கும். தற்போது, நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதால், பேருந்து நிறுத்தங்களில் கூட்டம் சேர்ந்துகொண்டே உள்ளது. பேருந்து வரும்போது அனைவரும் முண்டியடித்து ஏறுகின்றனர். இடம் கிடைக்காமல் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்கின்றனர். பேருந்துகளை முழு அளவில் இயக்கினால் மட்டுமே நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும்” என்றனர்.

தென்காசியில் இருந்து திருநெல்வேலிக்குச் சென்ற அரசு பேருந்தில் இடமின்றி படிக்கட்டுகளில் நின்று பயணித்த பயணிகள்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் நேற்று 60 சதவீத பேருந்துகள் அதாவது 160 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் 40 நகரப் பேருந்துகள், 120 வெளியூர் பேருந்துகள் ஆகும்.

அனைத்து பேருந்துகளிலும் விதிமுறைப்படி 26 பயணிகள் மட்டுமே ஏற்றிச் செல்லப்பட்டனர். பயணிகளிடம் இருந்து வரும் வரவேற்பைத் தொடர்ந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு நேற்று சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. அந்த ரயிலிலும் பயணிகள் முழு அளவில் பயணித்தனர்.

நாகர்கோவில்

நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து நெல்லை, மதுரை, திருச்சி, சென்னை, கோவை, வேளாங்கண்ணி எனவெளிமாவட்டங்களுக்கு முதல் கட்டமாக 124 பேருந்துகள் இயக்கப்பட்டன. இவற்றில் திருநெல்வேலி செல்லும் எண்ட் டூ எண்ட் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

ஏற்கெனவே, குமரி மாவட்டத்துக்குள் 221 உள்ளூர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வெளியூர் பேருந்துகளை இன்று முதல் கூடுதலாக இயக்குவதற்கு அரசு போக்குவரத்து கழகத்தினர் ஏற்பாடு செய்து வருகின்ற னர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x