

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு விடுக்கப்படும் அழைப்பு தொடர்பாக, அழைத்த இடத்துக்கு உடனடியாக சென்று புகார்களை விசாரிக்க சென்னையில் 353 ரோந்து வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
சென்னையில் குற்றச் செயல்களை முற்றிலும் கட்டுப்படுத்த காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
24 மணி நேரமும் ரோந்து
இதன் ஒருபகுதியாக சென்னையில் சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள், கூடுதல் சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள், ஜிப்சி ரோந்து வாகனங்கள், சிறப்பு சுற்றுக் காவல் வாகனங்கள் என 353 சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த வாகனங்கள் தற்போது 24 மணி நேரமும் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
100-க்கு அழைத்தால்..
திருட்டு, அடிதடி, சண்டை, சச்சரவுகள் மற்றும் புகார்கள் குறித்தும் அவசர உதவிகள் அழைப்புக்கும், பொதுமக்கள் காவல் துறை கட்டுப்பாட்டறை எண் 100-க்கு அழைத்தால், அவர்களின் இருப்பிடத்துக்கே விரைந்து சென்று அவர்களின் குறைகளை இந்த வகை ரோந்து வாகன பொறுப்பாளர்கள் நிவர்த்தி செய்து வருகின்றனர்.
இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, “அன்றாட ரோந்துப் பணிகள் மூலம் சென்னையில் அதிக அளவிலான குற்றங்கள் தடுக்கப்பட்டு வருகின்றன.
சிறப்பாக பணியாற்றும் ரோந்து வாகன பொறுப்பு அதிகாரிகளை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் அவ்வப்போது நேரில் அழைத்து பாராட்டி வருகிறார். குற்றங்களை முழுமையாக கட்டுப்படுத்த விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது’’ என்றனர்.