

தமிழகத்தில் கரோனா தொற்று, மருத்துவ கட்டமைப்புகள் குறித்து நிபுணர் குழுவினருடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் மார்ச் 24 முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கானது 8-வது கட்டமாக செப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நீட்டிப்பின்போது பல்வேறுதளர்வுகள் அறிவிக்கப்பட்டுள் ளன.
இந்நிலையில், நேற்று முன்தினம் தலைமைச் செயலர் கே.சண்முகம் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, அளிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக அக்டோபர் மாதத்தில் மிக மோசமான அளவு கரோனா பாதிப்பு இருக்கும் என்று தெரிவித்த அவர், கவனமாக பணியாற்றும்படி அறிவுறுத்தியுள்ளார்.
அறிவிப்புகள் வெளியாகலாம்
தற்போது தளர்வுகளுடனான ஊரடங்கை அமல்படுத்தி ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில், மருத்துவ கட்டமைப்பு மற்றும் கரோனா தடுப்பு சிகிச்சை முறை முன்னேற்றம் குறித்து மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இன்று காலை 9.30 மணிக்கு முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப்பின், பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.