Published : 08 Sep 2020 07:19 AM
Last Updated : 08 Sep 2020 07:19 AM

சென்னைக்கு மாற்றாக தமிழகத்துக்கு 2-வது தலைநகர் தேவையா?- கோரிக்கை எழுவதன் பின்னணியை விவரிக்கும் சிறப்புச் செய்தி

ச.கார்த்திகேயன், எம்.சரவணன்

கரோனாவின் தாக்கத்தால் கடந்த 5 மாதங்களாக தமிழக மக்களும், அரசு இயந்திரமும், பொருளாதாரமும் முடங்கியுள்ளது. இதனிடையே சென்னைக்கு மாற்றாக 2-வது தலைநகரம் தேவை என தென் மாவட்ட அமைச்சர்கள் விடுத்த கோரிக்கை மாநில அளவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

சென்னையில் குவிந்திருக்கும் அரசு அதிகாரம், வேலைவாய்ப்புகள், சென்னையை நோக்கி படையெடுக்கும் மக்கள், அவர்களுக்கான அடிப்படை தேவைகளான குடிநீருக்கு அருகமை மாவட்டங்களை நம்பியிருக்கும் நிலை, போதிய கழிவுநீர் கட்டமைப்புகள் இன்றி மழைநீர் வடிகாலில் கழிவுநீரை விட்டு கொசு உற்பத்தி, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் அவலம், குவியும் குப்பைகளை மேலாண்மை செய்ய முடியாமல் தவிக்கும் மாநகராட்சி, சுனாமி, அதிகனமழை, பெருவெள்ளம், மாநகரின் பசுமை பரப்பை குறைத்த வார்தா உள்ளிட்ட புயல்கள் என அவ்வப்போது மாநகரை மிரட்டும் இயற்கை பேரிடர்கள், உலகையே அச்சுறுத்தி வரும், உலக வெப்பமயமாதல், பருவநிலை மாற்றத்தால் சென்னையில் வருங்காலத்தில் ஏற்பட உள்ள பாதிப்புகள் போன்றவை மாநகருக்கு பெரும் சவாலாக உள்ளது.

ஒரு கோடி மக்கள்

இதனிடையே 2-வது தலைநகரம் தேவை என எழும் கோரிக்கையை ஒதுக்கிவிடவும் முடியாது. சென்னை மாவட்டம் 426 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. மாநகராட்சி தரவுகளின்படி இம்மாவட்டத்தில் மொத்தம் 21 லட்சத்து 21,669 குடும்பங்கள் வசிக்கின்றன. மாவட்ட மக்கள்தொகை 85 லட்சமாக உள்ளது. 15 லட்சம் பேர் சென்னைக்கு வந்து செல்கின்றனர். இங்கு சராசரியாக ஒரு சதுர கிலோ மீட்டரில் 26 ஆயிரம் பேரும் வடசென்னை போன்ற பகுதிகளில் சில இடங்களில் ஒரு சதுர கிமீ பரப்பில் 65 ஆயிரம் பேரும் வசிக்கின்றனர்.

சென்னை மக்களால் தினமும் 5,100 டன் குப்பைகள் உருவாகின்றன. திடக்கழிவு மேலாண்மை விதிகள் கடந்த 2000-ம் ஆண்டே வெளியிடப்பட்டன. தற்போது பல்வேறு திருத்தங்களுக்கு பிறகு 2016-ம் ஆண்டு வெளியிடப்பட்ட விதிகள் நடைமுறையில் உள்ளன. திடக்கழிவு மேலாண்மை விதிகள் அமலுக்கு வந்து 20 ஆண்டுகள் ஆகியும், இதுவரை முறையாக அமல்படுத்தப்படவில்லை.

தூய்மை நகரங்கள் பட்டியலில் மாநகராட்சி தொடர்ந்து பின்தங்கியே உள்ளது. கடந்த 2018-ல்மொத்தம் பங்கேற்ற 100 நகரங்களில் 100-வதுஇடத்திலும், 2020-ம் ஆண்டில் மொத்தம் பங்கேற்ற 47 நகரங்களில் 45-வது இடத்திலும் பரிதாப நிலையில் சென்னை இருந்து வருகிறது. இத்தனை ஆண்டுகளாக மக்கும் குப்பை, மக்காத குப்பை என வகை பிரிக்காமல், அனைத்தும் ஒன்றாக கொடுங்கையூர், பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகங்களில் கொட்டப்பட்டு வந்தது.அதனால் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று, நிலத்தடி நீர் கடுமையாக மாசடைந்துள்ளது. இப்போதுதான் குப்பைகளை வகை பிரிக்கவும், மறுசுழற்சி செய்யவும் மாநகராட்சி முயன்று வருகிறது. திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி இன்றும் வீடு வீடாக குப்பைகளை வகை பிரித்து பெறும் நடைமுறை அமலாகவில்லை.

54 லட்சம் வாகனங்கள்

தமிழ்நாடு போக்குவரத்து துறை தரவுகளில், கடந்த 2018-ம் ஆண்டு நிலவரப்படி சென்னையில் பொது போக்குவரத்துக்காக 2 லட்சத்து 43,904 வாகனங்கள், சொந்த பயன்பாட்டுக்காக 51 லட்சத்து 50,509 வாகனங்கள் என மொத்தம் 53 லட்சத்து 94,413 வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 42 லட்சத்து 54,811 இருசக்கர வாகனங்கள், 8 லட்சத்து 56,270 கார்களும் அடக்கம். வாகன பெருக்கத்தால் காற்று மாசு அதிகரிப்பதுடன், ஒலி மாசும் அதிகரிக்கிறது.

நாட்டின் பல்வேறு மாநகரங்களில் கடந்த 2018-ம் ஆண்டு மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஒலி மாசு தொடர்பான ஆய்வில்சென்னையில் பகல் நேர ஒலி மாசு 67.8 டெசிபலாகவும் இரவு நேரங்களில் 64 டெசிபலாகவும் இருந்தது. நாட்டின் வேறு எந்த நகரங்களிலும் இந்த அளவுக்கு ஒலி மாசு பதிவாகவில்லை.

சென்னையில் கடந்த 2011 முதல் 2014-ம்ஆண்டு வரை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நடத்திய ஒலி மாசு தொடர்பான ஆய்வில் பெரும்பாலான நாட்களில் ஒலி மாசுவின் அளவு, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகரித்தே இருந்துள்ளது. சாலையை விரிவாக்க முடியாத அளவுக்கு இடநெருக்கடி, வாகன பெருக்கம், ஒலி மாசு போன்றவை சென்னைக்கு பெரும் சவாலாக இருக்கிறது.

ஆட்டிப் படைக்கும் காற்று மாசு

சென்னையில் கடந்த ஆண்டு அண்ணா நகர், தியாகராய நகர், அடையார், கீழ்ப்பாக்கம், நுங்கம்பாக்கம் ஆகிய 5 இடங்களில் காற்றுத் தர பரிசோனையை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்டது. மொத்தம் 447 முறை(தலா 24 மணி நேரம்) பரிசோதனை செய்ததில் 149 முறை (3-ல் ஒரு பங்கு) அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக காற்று மாசு இருந்துள்ளது. பெரும்பாலும் மாசுவை மறைப்பதும், மாசுபடுவது தெரிந்தும் அமைதியாக வேடிக்கை பார்ப்பதும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் இயல்பு. அதனால் வாரியம் கொடுத்துள்ள தரவைவிட, மாசு அதிகமாகவே இருக்கும் என்பது மக்களின் கணிப்பு.

மாசு மறைப்பு

கடந்த 2018-ம் ஆண்டு தீபாவளி அன்று நாட்டிலேயே அதிகபட்சமாக சவுக்கார்பேட்டையில் 777 மைக்ரோ கிராம் அளவு காற்று மாசு பதிவானது. அனுமதிக்கப்பட்ட அளவான 100 மைக்ரோ கிராமை விட6 மடங்குக்கு மேல் மாசு பதிவாகி இருந்தது. அந்த ஆண்டு நாடு முழுவதும் தீபாவளி அன்று பதிவான காற்று மாசுவின் அளவு குறித்த மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தொகுப்பில், மாசுவை குறைத்துக் காட்டும் நோக்கில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் எடுக்கப்பட்ட காற்றுத் தரத்தை தனித்தனியாக வழங்காமல், அனைத்து இடங்களின் சராசரியை தமிழக வாரியம் வழங்கியது.

உண்மையில் சென்னையில் மிகக்கடுமையாக காற்று மாசடைகிறது. கடல் காற்று வீசுவதால் அந்த புகை எளிதில் சிதைவடைகிறது. பனிக்காலங்கள் மற்றும் கடல் காற்று வீசுவதில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக சில நேரங்களில் மாசு தரையிலேயே தங்கிவிடுகிறது. அப்போது பொதுமக்கள் பல்வேறு சுவாச பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வடகிழக்கு திசையில் கடலில் இருந்து தரைப்பகுதி நோக்கி வீசும் காற்று வலுவிழந்து இருந்தது. அப்போது காற்றில் ஈரப்பதமும் அதிகமாக இருந்தது. அந்த நேரத்தில் ஹைதராபாத் பகுதியில் வழக்கத்துக்கு மாறாக எதிர் காற்றுசுழற்சி நிலவியதால், கீழ் பகுதியில் உள்ள வாகனப் புகை, சாலை புழுதி, கட்டுமான தூசி போன்றவை கலந்த காற்று, வான் நோக்கிச் சென்று சிதைவடையவில்லை. இதனால் சென்னையில் காற்று மாசு அதிகரித்து, பகல்நேரம் மங்கலாக காட்சியளித்தது. அப்போது பொதுமக்களுக்கு பல்வேறு சுவாசப் பிரச்சினைகளும் ஏற்பட்டன.

கடல் காற்று வீசுவதால் குறைவாக பதிவாகும் மாசு அளவை பார்த்து அரசு நிர்வாகம் திருப்தி அடைந்துவிடக் கூடாது. அதற்கு பதிலாக, கடல் காற்று வீசாதபோது பதிவாகும் அதிக அளவிலான காற்று மாசுவையே கணக்கில் கொள்ள வேண்டும். அதன் அடிப்படையிலேயே எதிர்கால காற்று மாசுக்கட்டுப்பாட்டு திட்டங்களை அரசு வகுக்க வேண்டும். ஏனெனில் தற்போது பருவமழை பொய்த்து போவது, பருவம் தவறி பெய்யும் மழை போல, வருங்காலங்களில் சென்னையில் கிழக்கு திசை கடல் காற்று வீசாமல் போகலாம். காற்று வீசும் திசை கூட மாறலாம். அத்தகைய நிலை ஏற்பட்டால், அதை எதிர்கொள்ள இப்போது உள்ள காற்று மாசு கணக்கீடுகள் பயனளிக்காது.

காத்திருக்கும் ஆபத்துகள்

சென்னை சமவெளி நிலப்பரப்பை கொண்டது. இது சராசரியாக 2 மீட்டர் உயரமுடையதாக உள்ளது. சில பகுதிகளில் கடல் மட்டத்தையும்விட தாழ்வாக உள்ளது. அதனால் பருவமழைக் காலங்களில், மழைநீர் வடிவதில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது.

சென்னையை நிலவியல் ரீதியாக மணற்பாங்கான பகுதி, களிமண் பாங்கான பகுதி, உறுதியான பாறைபாங்கான பகுதி என 3 வகையாக உள்ளன. தியாகராய நகர், மேற்கு மாம்பலம், அண்ணாநகர், பெரம்பூர், விருகம்பாக்கம் போன்றபகுதிகள் களிமண் பாங்கானதாகவும் ஆதம்பாக்கம், சைதாப்பேட்டை ஆகியவை கடின பாறை பகுதியாகவும் திருவான்மியூர், அடையாறு, கொட்டிவாக்கம், சாந்தோம், ஜார்ஜ் டவுன், தண்டையார்பேட்டை மற்றும் கடலோரப் பகுதிகள் மணற்பாங்காகவும் உள்ளன. கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் நீர் உறிஞ்சும் தன்மை அதிகமாகவும் களிமண், கடின பாறைபகுதிகளில் மழைநீர் உறிஞ்சு தன்மை மெதுவாகவும் உள்ளது.

மாயமான நீர்நிலைகள்

சென்னை மாநகரின் 1909-ம் ஆண்டு வரைபடத்துடன் தற்போதைய வரைபடத்தை ஒப்பிட்டால், பல நூற்றுக்கணக்கான நீர்நிலைகள் காணாமல் போயுள்ளன. ஆக்கிரமிப்பால் பல நீர்நிலைகளின் பரப்பளவு சுருங்கியுள்ளது. 3 மாவட்டங்களில் வடிநிலப் பகுதியாக சென்னை விளங்குவதாலும், அடையாறு, கூவம் போன்ற ஆறுகளின் முகத்துவாரத்தில் மணற்படுகைகள் ஏற்படுவதாலும், அந்த ஆறுகளில் திடக்கழிவுகள் கொட்டப்படுவதாலும், வெள்ளநீர் செல்வதில் இடையூறு, வெள்ளநீர் வடிவதில் தாமதம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தி விடுகிறது.

சென்னை, மும்பை, திருவனந்தபுரம், விசாகப்பட்டினம் உள்ளிட்ட இந்தியாவின் கடலோர நகரங்களில் பருவ நிலை மாற்றம் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் சென்னை ஐஐடியின் அறிவியல் தொழில்நுட்பத் துறை ஆராய்ச்சியாளர்கள் கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்டபெருவெள்ளம் தொடர்பான தரவுகள் அடிப்படையில் ஒரு ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அதில்,"கரியமில வாயுவை அதிக அளவில் வெளியிடுவதன் காரணமாக சென்னையில் வரும் காலங்களில் மழைப்பொழிவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரிக்கக் கூடும். இது 2015-ம்ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தை விட பன்மடங்கு பேரிழப்பை ஏற்படுத்தக் கூடும். வெள்ளநீர் வடிய வாய்ப்பு இல்லாததால், கடலோர பகுதிகள் மூழ்கக்கூடும்" என்று கணிக்கப்பட்டுள்ளது.

கடல் மட்டம் உயரும்

பருவநிலை மாற்றம் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள தேசிய செயல்திட்டத்தில் கூறியிருப்பதாவது:

அதிக அளவு கரியமில வாயு வெளியேற்றத்தால் கடந்த 100 ஆண்டுகளில் சராசரி புவி வெப்பநிலையை விட 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்திருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள நிலையே தொடர்ந்தால், அடுத்து வரும் 100 ஆண்டுகளில் 3 டிகிரி முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை புவி வெப்பம் அதிகரிக்கும் என கருதப்படுகிறது. கரியமிலவாயுவை வெளியிடும் நாடுகளில் சீனா முதல் இடத்திலும், இந்தியா 4-வது இடத்திலும் உள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு 2,622 மெகா டன் (ஒரு மெகா டன் என்பது 10 லட்சம் டன்) வெளியிடப்படுகிறது. இதேநிலை நீடித்தால் புவி வெப்பநிலை உயர்ந்து, அண்டார்ட்டிகா போன்ற பகுதிகளில் பனிப்பாறைகள் உருகும். அதனால் கடல் நீர் மட்டம் உயர்வு, கடலோரப் பகுதிகள் மூழ்குதல், எதிர்பாராத அதிகனமழை, வெள்ளம், கடும் வறட்சி, புயல், பருவம் தவறிய மழை உள்ளிட்ட பல்வேறு இயற்கை பேரிடர்கள் ஏற்படக்கூடும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு கடல் மட்டம் உயர்ந்தால், கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 2 மீட்டர் உயரத்தில் இருக்கும் சென்னை மாநகரின் கடலோரப் பகுதிகள் கடலில் மூழ்குவதை தவிர்க்க முடியாது.சென்னை மாநகரம் இத்தகைய நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவது, 2-ம் தலைநகர் கோரிக்கைக்கு வலு சேர்ப்பதாக உள்ளது.

அரசு செய்வதென்ன?

மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, "2030-ம்ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பல்வேறு பேரிடர் ஆபத்துகளில் இருந்து சென்னையை பாதுகாக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய பேரிடர் தடுப்பு மற்றும் மீட்பு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் அடையாறு கூவம், கோவளம், கொசஸ்தலை ஆறுஆகியவற்றை ரூ.4,034 கோடியில் சீரமைக்கும்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 92 வடிகால்வாய்களில் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருப்பதை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரூ.1500 கோடியில் நீர்வழித் தடங்களின் தூய்மை மற்றும் அடைப்பற்ற தன்மை ஏற்படுத்தப்பட உள்ளது" என்றனர்.

சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் கூறும்போது, "அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள ரூ.3 லட்சத்து 24 ஆயிரம் கோடி திட்ட மதிப்பீட்டில் செயல்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் கடலோர மேலாண்மை திட்டம், நீர்வள ஆதாரத்தை மேம்படுத்துவது, நிலையான வேளாண்மை உள்ளிட்ட 7 அம்சங்களின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன" என்றனர்.

வெறும் நிர்வாக தலைநகரா?

மதுரையில் கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி நடைபெற்ற அதிமுக மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் தான் மதுரையை தமிழகத்தின் 2-வது தலைநகராக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு காரணமாக இருந்த வருவாய்த் துறை அமைச்சரும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளருமானஆர்.பி.உதயகுமார், "தமிழகத்தின் மிகப்பழமையான மாநகரமான மதுரையை 2-வது தலைநகராக்க வேண்டும். இங்கு உயர் நீதிமன்ற கிளை, சர்வதேச விமான நிலையம், ரயில் நிலையம் ஆகியவை உள்ளன. 150 கி.மீ. தொலைவில் தூத்துக்குடி துறைமுகம் உள்ளது. உலகின் பல நாடுகளில் 2-வது தலைநகரங்கள் உள்ளன. நம் நாட்டிலேயே குஜராத்தில் இரு தலைநகரங்கள் உள்ளன. ஆந்திர மாநிலத்தில் 3 தலைநகரங்கள் அமைய உள்ளன. எனவே, மதுரையை 2-வது தலைநகராக்க வேண்டும்" என்று வலியுறுத்தி வருகிறார்.

இதற்கிடையில் திருச்சியைச் சேர்ந்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், "எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோதே முயன்றதால், திருச்சியைதான் 2-வது தலைநகராக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். அவருக்கு ஆதரவாக திருச்சி எம்பி சு.திருநாவுக்கரசர் குரல் கொடுத்துள்ளார்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்தே நிர்வாகத் தலைநகராக கட்டமைக்கப்பட்ட மாநகரம் சென்னை. இது துறைமுகம், விமான நிலையம், ரயில் நிலையங்கள், சாலை வசதிகள் நிறைந்திருக்கும் நகரம். 2-வது தலைநகரை உருவாக்கினால் மக்கள் நெருக்கம் குறைந்துவிடுமா என்ற கேள்வியை பலரும் எழுப்புகின்றனர்.

தமிழகத்தில் தொழில் நகரமான கோவைக்கு அருகில் திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்கள் குறு சிறு, நடுத்தர ஆலைகள், நூற்பாலைகள், பின்னலாடை, கறிக்கோழி, முட்டை, லாரி, வாகனங்கள் கட்டுதல், ஜவுளி என்று பல லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் தொழில் மாவட்டங்களாக உள்ளன. இதனால்தான் அப்பகுதி வளர்ச்சி அடைந்துள்ளது.

தொழில் துறையினர் பலரிடம் பேசியபோது, "சென்னையின் மக்கள் நெருக்கத்தை குறைக்க வேண்டுமானால் திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் போன்ற தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தி, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்" என்கின்றனர்.

பொது போக்குவரத்து

சென்னை ஐஐடியின் போக்குவரத்து மேலாண்மை வல்லுநர்கள் கூறும்போது, "போக்குவரத்தை குறைக்க 2-ம் தலைநகரை உருவாக்கினாலும் சில ஆண்டுகளில் அங்கும் நெரிசல் ஏற்படும். எனவே, போக்குவரத்து நெரிசலை குறைக்க 2-வது தலைநகரம் தீர்வாகாது. தொடர் கண்காணிப்பும், அந்த சூழலுக்கு ஏற்ற தீர்வை கண்டுபிடித்து அமல்படுத்துவதுமே நிரந்தர தீர்வாக இருக்கும்" என்றனர்.

போக்குவரத்து மேலாண்மை நிறுவனமான ஐடிடிபியின் முதுநிலை திட்ட மேலாளர் அஸ்வத்தி திலீக் கூறும்போது, "மக்களின் தேவைக்கு ஏற்ப சென்னையில் பேருந்துகள் இல்லை. எனவே சென்னையில் முதலில் பொதுப் போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும். ரயில் போக்குவரத்தையும் அதிகரிக்கலாம். சிங்கப்பூரை போன்று கார் பதிவு கட்டணத்தை உயர்த்துவது, இங்கிலாந்தை போன்று கார் நிறுத்த கட்டணத்தை உயர்த்துவது போன்ற நடவடிக்கையால் நிச்சயம் சென்னையில் போக்குவரத்து நெரிசல் குறையும்" என்றார்.

முன்மாதிரி நிறுவனம்

எல்லா மென்பொருள் நிறுவனங்களும் மாநகரை நோக்கி பயணிக்கையில், செங்கல்பட்டு அடுத்த கூடுவாஞ்சேரியில் சோஹோ (ZOHO) என்ற நிறுவனம், பின்தங்கிய மாவட்டங்களில் குக்கிராமங்களில் இயங்கும் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ஏற்ற திறனை பயிற்சியளித்து வேலைக்கு அமர்த்தி வருகிறது. இந்நிறுவனம் தனது கிளையை தென்காசியில் அமைத்துள்ளது. கூடுவாஞ்சேரி அலுவலகத்தில் 10 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருந்து பணிபுரியவும் 10 பேர் ஒன்றாக சேர வாய்ப்புள்ள பகுதிகளில் சிறு அலுவலகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டும் யாரையும்அலுவலகத்துக்கு அழைக்காததால் 10 ஆயிரம்பேரின் பயணமும் நெரிசலும் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுபோன்று மற்ற நிறுவனங்களையும் செயல்படவைத்தால் சென்னை, புறநகர் பகுதிகளில் நெரிசல் வெகுவாக குறையும்.

மின்னாளுமை திட்டம்

ஏற்கெனவே அரசின் மின்னாளுமை திட்டம் அமலில் உள்ளது. இ-சேவை மையங்களில் 60-க்கும் மேற்பட்ட சேவைகள் கிடைக்கின்றன. ஏழை மக்களுக்கு இணையவழி மூலம் தீர்வு கிடைத்துவிட்டால், அவர்கள் அலுவலகம் நோக்கி வரும் மக்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். அரசு கோப்புகள் நகர்வை 100 சதவீதம் இணையமயமாக்கிவிட்டால், அரசு அலுலகம் எங்கிருந்தாலும் அதைப் பற்றி மக்கள் கவலைப்படப் போவதில்லை என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது. சென்னையில் கடுமையாக காற்று மாசடைகிறது. பனிக் காலங்கள் மற்றும் கடல் காற்று வீசுவதில் ஏற்படும் மாற்றங்களால் மாசு தரையிலேயே தங்கி பல்வேறு சுவாச பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x