

திருநெல்வேலியில் திருநங்கைகள், நரிக்குறவர்களுக்கு கரோனா கால தொழிற்பயிற்சியை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தொடங்கி வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பேட்டை ,வள்ளியூர், அழகிய பாண்டியபுரம் உள்ளிட்ட இடங்களில் 300-க்கும் மேற்பட்ட நரிக்குறவ குடும்பங்கள் வசிக்கின்றன.
திருவிழாக்களிலும், மக்கள் கூடும் இடங்களிலும் பிச்சை எடுத்தும், அன்பளிப்புகள் பெற்றும் ,பாசி, ஊசி விற்பனை செய்தும் தங்களது வாழ்க்கையை இவர்கள் நடத்தி வந்தனர்.
தற்போது கரோனா காலத்தில் திருவிழாக்கள், கொடை விழாக்கள் நடத்தப்படவில்லை. மேலும் சுற்றுலாத்தலங்களும் திறக்கப்படவில்லை. இதனால் இவர்கள் வியாபாரம் செய்ய முடியவில்லை.
எனவே கடந்த 4 மாதங்களுக்கு மேலாக தெருவோரங்களில் மற்றும் கடைகளில் பிச்சை எடுத்துதான் தங்களது வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர்.
பல இடங்களில் இவர்களை பொதுமக்கள் விரட்டி விடுகின்றனர். இதுபோலவே திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் தங்களது வாழ்வாதாரத்திற்காக தெருக்களில், கடை வீதிகளிலும் பிச்சை எடுத்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு இந்த விவகாரம் வந்ததை அடுத்து நரிக்குறவர்கள், திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் அவர்களுக்கு சுய தொழில் கற்றுக்கொடுக்க மகளிர் திட்டம் மூலம் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி அதிக அளவில் தேவைப்படும் முக கவசங்கள், சனிடேஷன், கை கழுவும் திரவங்கள் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி அவர்கள் இருக்கும் இடத்திலேயே அளிக்க திட்டமிடப்பட்டு இன்று பயிற்சி தொடங்கி வைக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். பயிற்சி பெற்றவர்கள் தயாரிக்கும் பொருட்களை உள்ளாட்சி நிர்வாகங்கள் வாங்குவதற்கும், பயிற்சி காலத்தில் ஊக்கத்தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் அப்போது தெரிவித்தார். முதற்கட்டமாக 30 நரிக்குறவர் சமுதாயத்தினர், 20 திருநங்கைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.