Published : 07 Sep 2020 19:51 pm

Updated : 07 Sep 2020 20:11 pm

 

Published : 07 Sep 2020 07:51 PM
Last Updated : 07 Sep 2020 08:11 PM

கல்வியாளர் குழு அமைத்ததில் தமிழ்நாடு அரசின் தவறான செயல்பாடு; வரலாற்றுப் பிழையைச் செய்ய வேண்டாம்: அரசுக்கு கி.வீரமணி எச்சரிக்கை

the-misconduct-of-the-government-of-tamil-nadu-in-setting-up-the-academic-committee-don-t-make-historical-mistake-and-accept-historical-blame-k-veeramani-warns-the-government

புதிய கல்விக்கொள்கை குறித்து ஆராய தமிழ்நாடு அரசு அமைத்துள்ள கல்வி நிபுணர்கள் குழுவில் கல்வியாளர்கள்,பெற்றோர், ஆசிரியர், மாணவப் பிரதிநிதிகள் அவசியம் தேவை, மேம்போக்காக குழு அமைத்து வரலாற்றுத் தவறை செய்து விடாதீர்கள் என தமிழக அரசுக்கு கி.வீரமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று வெளியிட்ட அறிக்கை:


“தமிழ்நாட்டில் உள்ள அதிமுக அரசு இதில் மும்மொழிக் கொள்கையை ஏற்கமாட்டோம் என்று கூறியது வரவேற்கத்தக்கதுதான் என்றாலும்கூட, புதிய கல்விக் கொள்கை அதுமட்டுமேயல்ல. கல்வி நிபுணர்கள் குழு அமைத்திருப்பதில், இந்நாள், முன்னாள் துணைவேந்தர்கள் ஐவரை மட்டும் உறுப்பினர்களாக நியமித்து, உயர்கல்வித் துறை செயலாளரான ஐஏஎஸ் அதிகாரியைத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளது, துணைவேந்தர் பதவிகளையே சிறுமைப்படுத்துவதுபோல அமைந்துள்ளது.

பள்ளிக் கல்விக்கான பொதுமேடை அமைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு சுட்டிக்காட்டியதுபோல, பல்கலைக் கழகங்கள் தன்னாட்சி பெற்றவை. பல்கலைக் கழகங்களில் ஆட்சிக் குழுவில் இடம்பெறும்போதுகூட (Ex-officio) கல்வித் துறை செயலாளர்களை, அதிகாரிகளை உறுப்பினர்களாகவும், துணைத் தலைவராகவும் இருப்பதுதான் நடைமுறை.

இதிலும், அவர்களில் ஒருவர் தலைவராகவும், அரசு அதிகாரி ஒருங்கிணைக்கும் குழுவின் செயலாளராகவும்தான் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த மரபு இதில் கடைப்பிடிக்கப்படவில்லை.
அதைவிட இந்தக் குழுவில் சமூக ஆர்வலர்களோ, பள்ளிக் கல்வியில் அனுபவம் பெற்ற ஓய்வு பெற்ற இயக்குநர்களோ அல்லது பழுத்த அனுபவம் வாய்ந்த எஸ்.எஸ்.இராஜகோபாலன் போன்ற முதிர்ச்சியாளர்களோ இடம்பெறாதது ஏனோ புரியவில்லை.

கல்வியை மத்திய பட்டியலுக்கு ‘கடத்துவதா’?

கல்விக் கொள்கை கீழ்நிலையிலிருந்து உயர்கல்வி வரையில் இதில் ஆசிரியர்களின் பிரதிநிதிகள், பெற்றோர்கள், மாணவர்களின் பிரதிநிதிகள், பொதுநல ஆர்வலர்கள் அனைவரும் இடம்பெற்றிருந்தால்தான் இதற்குரிய முழுமை கிடைக்கும்.

அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப் பெறுதல் அவசியம். தமிழக சட்டமன்றத்தில் இந்தக் கல்விக் கொள்கைப்பற்றி திட்டவட்டமாக மாநில அரசுகளின் கருத்துகளை மத்திய அரசு கேட்கவேண்டும் என்று வற்புறுத்தவேண்டும்.

கல்வி ஏதோ இப்போதே (யூனியன்) மத்திய அரசு பட்டியலுக்கு ‘‘ஐஜாக்‘’

(Hijack)செய்யப்பட்டிருப்பதைப்போல, மாநில அரசுகளையும், நாடாளுமன்ற, சட்டமன்றங்களையும் அலட்சியப்படுத்துதல் அரசமைப்புச் சட்டத்தினையே புறக்கணிப்பது போன்றதாகும்.
காரணம், கல்வி இன்னமும் ஒத்திசைவுப் பட்டியலில் (Concurrent List) தான் இருக்கிறது என்பதை ஏனோ மத்திய அரசு ‘வசதியாக மறந்துவிட்டதுபோல்’ நடவடிக்கைகளை நடத்தி வருகிறது. மாநிலங்கள் தங்கள் உரிமைகளை வற்புறுத்திட வேண்டியது அதுவும் குழந்தைகளின் கல்வி என்பது அடிப்படை என்பதை எவரேனும் மறுக்க முடியுமா?

சரித்திர வீண்பழியைத் தேடவேண்டாம்

தமிழ்நாடு அரசு தனது குழுவை மாற்றி அமைத்து, ஆக்கபூர்வமான அறிக்கை வெளிவர முழு கவனஞ்செலுத்த வேண்டியது அவசர அவசியம் இல்லையானால், வரலாற்றுப் பிழையைச் செய்தவர்கள் என்ற வரலாற்றுப் பழியை ஏற்கவேண்டியவர்களாகி விடுவார்கள் என்பது உறுதி”.

இவ்வாறு கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.


தவறவிடாதீர்!

The misconduct of the GovernmentTamil NaduEtting up the Academic CommitteeDon't make historical mistakeAccept historical blameK. VeeramaniWarnsGovernment கல்வியாளர் குழு அமைப்புதமிழ்நாடு அரசுதவறான செயல்பாடுவரலாற்றுப் பிழைவரலாற்றுப் பழியை ஏற்கவேண்டாம்அரசுகி.வீரமணிஎச்சரிக்கை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author