Published : 07 Sep 2020 05:53 PM
Last Updated : 07 Sep 2020 05:53 PM

ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்: தமிமுன் அன்சாரி வலியுறுத்தல்

6 மாதங்களுக்கான சாலை வரியில் விலக்கு அளிப்பது, இன்சூரன்ஸ் கட்டணத்தை செலுத்த 6 மாத கால அவகாசம் அளிப்பது என தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கையை தமிழக அரசு கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என மஜக கட்சித்தலைவர் தமிமுன் அன்சாரி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து தமிமுன் அன்சாரி இன்று விடுத்துள்ள அறிக்கை:

“கரோனா நெருக்கடியில் பெரும் பாதிப்புகளை சந்தித்தவர்களில் தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்களும் அடங்குவர். உரிமையாளர்களின் வருவாய் இழப்பு ஒருபுறமெனில், இதை சார்ந்த தொழிலாளர்களின் நிலையும் பரிதாபமாக இருக்கிறது.

ஒரு பேருந்தில் இரண்டு ஓட்டுனர்கள், இரண்டு பணியாளர்கள், கட்டணம் பதிவு செய்யும் ஏஜெண்டுகள் என கணக்கிட்டால், பல்லாயிரக்கணக்கானவர்கள் இதனால் வாழ்வாதாரங்களை இழந்துள்ளதை அறிய முடியும்.

தனியார் ஆம்னி பேருந்துகளை இன்று முதல் இயக்கிட அரசு அனுமதியளித்துள்ள நிலையில், அவர்களால் வாகனங்களை இயக்க முடியாத நிலை உள்ளது. செப்டம்பர் 30 வரை இவற்றை இயக்கிட வாய்ப்பில்லை என்றும் அவர்களது சங்கம் அறிவித்துள்ளது.

இது ஏன்? என்பது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். 5 மாதங்கள் முழுமையாக ஆம்னி பேருந்துகள் இயங்காத நிலையில், அவர்களால் சாலை வரியை எப்படி செலுத்த இயலும்? தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள், கரோனா நெருக்கடி கால கட்டத்தில் மட்டும் 25 முறை பெட்ரோல்-டீசல் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். இந்த நிலையில் தற்போது சமூக இடைவெளியுடன் பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவும் உள்ளது.

எனவே 6 மாதங்களுக்கான சாலை வரியில் விலக்கு அளிப்பது, இன்சூரன்ஸ் கட்டணத்தை செலுத்த 6 மாத கால அவகாசம் அளிப்பது என தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கையை தமிழக அரசு கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

சீரான பொதுப் போக்குவரத்தையும், பயணிகளின் நலனையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு இவ்விஷயத்தில் செயல்பட வேண்டியது அவசியம் என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம்”.

இவ்வாறு தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x