ஓசூர்- சேலம் இடையே அரசுப் பேருந்துகள் இன்றி 3 மணி நேரம் திண்டாடிய பயணிகள் - நேரம் காப்பாளரை முற்றுகையிட்டதால் பரபரப்பு

ஓசூர் பேருந்து நிலையத்தில் சேலம் வழித்தடத்தில் பேருந்துகளை இயக்க கோரி நேரங்காப்பாளரை முற்றுகையிட்ட பயணிகள் | படங்கள் - ஜோதி ரவிசுகுமார்.
ஓசூர் பேருந்து நிலையத்தில் சேலம் வழித்தடத்தில் பேருந்துகளை இயக்க கோரி நேரங்காப்பாளரை முற்றுகையிட்ட பயணிகள் | படங்கள் - ஜோதி ரவிசுகுமார்.
Updated on
2 min read

ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து சேலம் வழித்தடத்தில் காலை 6 மணியில் இருந்து 9 மணிவரை பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் நீண்ட நேரமாகக் காத்திருந்த பயணிகள் நேரம் காப்பாளரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 1-ம் தேதி முதல் ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டு மாவட்டத்துக்குள் அரசுப் பேருந்துகள் இயக்கம் தொடங்கியது. அதன் பிறகு ஊரடங்கில் மேலும் தளர்வுகள் செய்யப்பட்டு 7-ம் தேதி முதல் மாவட்டங்களுக்கிடையே அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என்ற மாநில அரசின் அறிவிப்பு வெளியானது. அதைத் தொடர்ந்து ஓசூரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கிடையே அரசு விரைவுப் பேருந்துகள் இயங்க தொடங்கி உள்ளன.

ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அரசு விரைவுப் பேருந்துகள் காலை 6 மணி முதல் ஓடத் தொடங்கின. சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு மாவட்டங்களுக்கிடையே பேருந்துகள் இயக்கப்பட்டதால், வெளி மாவட்டங்களில் உள்ள சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் அதிகாலையில் இருந்தே ஓசூர் பேருந்து நிலையத்துக்கு வந்தவண்ணம் இருந்தனர். இதில் பெங்களூரு நகரில் இருந்து ஓசூர் நகருக்குப் புறப்பட்டு வந்த பயணிகளே அதிகமாகக் காணப்பட்டனர்.

இந்நிலையில் ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்குக் காலையில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் சேலம் வழித்தடத்தில் மட்டும் காலை 6 மணியில் இருந்து காலை 9 மணிவரை அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் நீண்ட நேரமாகக் காத்திருந்த பயணிகள் பொறுமை இழந்து காலை 8.35 மணியளவில் நேரங்காப்பாளரை முற்றுகையிட்டு, உடனடியாக சேலம் வழித்தடத்தில் அரசுப் பேருந்துகளை விட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

ஓசூர் பேருந்து நிலையத்தில் சேலம் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்
ஓசூர் பேருந்து நிலையத்தில் சேலம் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்

சேலத்தில் இருந்து 5 பேருந்துகள் புறப்பட்டு வந்து கொண்டிருக்கின்றன. இன்னும் சிறிது நேரத்தில் ஓசூர் வந்து விடும், மேலும் முதல் நாள் என்பதால் ஓட்டுனரும், நடத்துனரும் பணியில் உடனடியாக இணைவதில் சிரமம் உள்ளது. சிறிது நேரத்தில் சேலம் வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டுவிடும் என்று பேருந்து நிலைய அதிகாரிகள் பயணிகளைச் சமாதானப்படுத்தினர். பின்பு காலை 9.30 மணியளவில் தருமபுரி வழித்தடத்தில் இயக்கப்பட்ட அரசு பேருந்தில் சேலம் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்துச் சேலம் செல்வதற்காக ஓசூர் பேருந்து நிலையத்தில் காத்திருந்த பெங்களூருவைச் சேர்ந்த பயணி மணி(60) கூறும்போது, ''பெங்களூரு நகரில் இருந்து சேலம் செல்வதற்காக அதிகாலையிலேயே எழுந்து, கர்நாடகா பேருந்தில் அம்மாநில எல்லையான அத்திப்பள்ளி வரை பயணித்து, பின்பு அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் வரை நடந்து வந்து, தமிழக எல்லையான ஜுஜுவாடியில் நின்றிருந்த தமிழக அரசுப் பேருந்தில் பயணித்து ஓசூர் வந்திருக்கிறோம். இங்கு 3 மணி நேரம் காத்திருந்தும் சேலம் பேருந்து வரவில்லை.

சிற்றுண்டி கூடச் சாப்பிடவில்லை. 7-ம் தேதி முதல் மாவட்டங்களுக்கிடையே அரசு பேருந்துகள் இயக்கப்படும் என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இங்கு உரிய நேரத்தில் பேருந்து வசதி செய்யப்படவில்லை. கரோனா காலகட்டத்தில் வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுடன் நீண்ட நேரம் காத்திருப்பது பயணிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in