

தூத்துக்குடியில் இருந்து சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட்டன. இதனால் மக்கள் உற்சாகமாக வெளியூர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. இடையில் ஜூன் மாதம் மண்டலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டது. ஆனால், சில நாட்கள் மட்டுமே அது நீடித்தது. அதன் பிறகு நிறுத்தப்பட்டுவிட்டது.
தற்போது கடந்த 1-ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு உள்ளே பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்ட நிலையில், இன்று முதல் மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இன்று 60 சதவீத பேருந்துகள் அதாவது மொத்தம் 160 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் 40 பேருந்துகள் நகர பேருந்துகள் ஆகும்.
120 பேருந்துகள் வெளியூர் பேருந்துகள் ஆகும். தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, சங்கரன்கோவில், மதுரை, திண்டுக்கல், கோவை, கரூர் உள்ளிட்ட இடங்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதேபோல் தமிழ்நாடு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் திருச்செந்தூரில் இருந்து வழக்கமான வழித்தடத்தில் சென்னைக்கு ஒன்று, கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு ஒன்று, சேலத்துக்கு ஒன்று, தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு ஏசி இல்லாத படுக்கை வசதி பேருந்து ஒன்று, விளாத்திகுளத்தில் இருந்து சென்னைக்கு ஒன்று, அருப்புக்கோட்டையில் இருந்து சென்னைக்கு ஒன்று, தூத்துக்குடியில் இருந்து ஓசூருக்கு ஒன்று என மொத்தம் 7 பேருந்துகள் இயக்கப்பட்டன.
அனைத்து பேருந்துகளிலும் 26 பயணிகளை மட்டுமே ஏற்ற வேண்டும் என்ற விதிமுறை இருப்பதால் முழு பயணிகளுடன் பேருந்துகள் சென்றன. பயணிகளிடம் இருந்து வரும் வரவேற்பை தொடர்ந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. அந்த ரயிலிலும் பயணிகள் முழு அளவில் பயணித்தனர்.